• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புத்தாண்டுக்குள் மெரினாவை தூய்மைப்படுத்த வேண்டும் - மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு

புத்தாண்டுக்குள் மெரினாவை தூய்மைப்படுத்த வேண்டும் - மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை குப்பை கோலமாக காட்சி அளிப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், புத்தாண்டுக்கு முன்னதாக மெரினா முழுமையாக சுத்தப்படுத்தி, புத்தாண்டின் போது தூய்மையான மெரினாவாக இருக்க வேண்டும் என மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    புத்தாண்டிற்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக மாற்ற திட்டம் வகுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    வடபழனியில் கடந்த ஆண்டு மே மாதம் தனியார் கட்டிடத்தில் ஏற்பட்ட  தீ விபத்தால் 4 பேர் பலியாயினர். முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்த கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி இருந்தனர்.

    மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், விபத்தில் பலியான 4 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்த 6 பேருக்கு தலா 50,000 ரூபாயும்,
    லேசான காயம் அடைந்த 2 பேருக்கு தலா 25,000 ரூபாய் வீதம் 9 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், கட்டட உரிமையாளருக்கு எதிரான குற்ற வழக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானது அல்ல என குறிப்பிட்ட நீதிபதிகள், கூடுதல் இழப்பீடு வழங்குவது பற்றி பதில் அளிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

    அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 வாரத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், கட்டட உரிமையாளர் விஜயகுமார் மீதான குற்ற வழக்கில் குற்றப்பத்திரிக்கையை 1 வாரத்தில் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    மேலும், மெரினா கடற்கரை குப்பையாக காட்சி அளிப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், புத்தாண்டுக்கு முன்னதாக மெரினா முழுமையாக சுத்தப்படுத்திட திட்டம் வகுத்து செயல்படுத்தவும், புத்தாண்டின் போது தூய்மையான மெரினாவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: