சீனா - இந்தியா இடையேயான உச்சி மாநாடு பழமையான புராதான சின்னங்களையும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்ட மாமல்லபுரத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் அதில் கலந்துகொண்டனர். அதன்பிறகு மாமல்லபுரத்தின் புகழ் இந்திய அளவில் பரவ, வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. சமீபத்தில் கூட கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குடும்பத்தினருடன் வருகை புரிந்தார்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். அவரை மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தையும் அளித்தனர். பின்னர் சிவராஜ் சிங் சவுகான், ‘மக்களுடன் மக்களாக சுற்றுப் பார்த்துவிட்டு செல்கிறேன், தனக்காக பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடந்து சென்ற சிவராஜ் சிங் சவுகான், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட அக்கோயிலின் அழகுமிகு தோற்றத்தை கண்டு ரசித்தார். கடற்கரை கோயிலில் உள்ள விஷ்ணு, சிவன் சன்னதிகளையும் பார்வையிட்டார். கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டதன் பின்னணி, கடலின் உப்புக்காற்று அரிக்காதபடி பாதுகாப்பது எப்படி போன்றவை அவருக்கு விளக்கப்பட்டன.
கோயில் சிற்பங்களை ரசித்து பார்த்த சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மத்திய பிரதேச முதல்வரின் வருகை காரணமாக கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.