அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்தவர் மதுசூதனன்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்தவர் மதுசூதனன்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பு என மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில ஆண்டுகளாகவே மதுசூதனன் உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனன், இதற்காகக் கடந்த காலங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்றே வந்துள்ளார். இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Also read: எம்.ஜி.ஆர் ரசிகன் முதல் அதிமுக அவைத்தலைவர் வரை.. மதுசூதனின் வாழ்க்கை வரலாறு

    முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிமுகவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பைப் பெற்றவர். அவர்களால் கட்சியில் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர். அதிமுகவின் அவைத் தலைவராகப் பணியாற்றிய அவர், அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பட்டிதொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடித் தலைவரை அதிமுக இழந்திருப்பது பேரிழப்பாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சாதாரணத் தொண்டர் முதல் அக்கட்சியின் தலைவர்கள் வரை அனைவரிடமும் இனிமையாகப் பழகியவர்.

    ஏழை - எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த மதுசூதனன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: