எம்.ஜி.ஆருடன் நெருக்கம்: தொண்டர்களுக்கு அஞ்சாநெஞ்சன் - மதுசூதனின் அரசியல் பயணம்

மதுசூதனன்

அ.தி.மு.கவின் அவைத் தலைவராக இருந்துவரும் மதுசூதனனின் அரசியல் பயணம் மிக நீண்டது.

  • Share this:
அ.தி.மு,கவின் அவைத்தலைவர் மதுசூதனன் வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1950களில் தீவிர எம்ஜிஆர் ரசிகனான மதுசூதனன் சென்னையில் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் தொடங்கி அதற்கு தலைவராக செயல்பட்டு வந்தார். பிறகு 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியபோது நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் மற்றும் சத்யா ஸ்டுடியோவிற்கு தினம் தோறும் சென்று சந்தித்தார் மதுசூதனன்.

எம்ஜிஆர் கட்சி தொடங்கியதாக அறிவித்த நேரத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்றபோது அங்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளால் வைக்கப்பட்டிருந்த ஏணி அங்கு இல்லை.

உடனடியாக மதுசூதனன் தனது ஆதரவாளர்களைக் கொண்டு மனித பிரமிடை ஏற்படுத்தி அதில் ஏறி எம்ஜிஆரை ஏற்றி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். எம்ஜிஆரின் கவனத்தை ஈர்த்த மதுசூதனன் அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 1980ஆம் ஆண்டு அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.

அப்போது அதிமுகவிற்கு அமைப்பு ரீதியாக சென்னை ஒரு மாவட்டமாக இருந்தது, சென்னை மாவட்டச் செயலாளர் பதவிக்கு அ.தி.மு.கவில் மதுசூதனன் மற்றும் மறைந்த ஜேப்பியார் கல்வி நிறுவன நிறுவனரான ஜேபிஆர் போட்டியிட்டனர். அதில் மதுசூதனன் தோல்வி அடைந்தாலும் எம்ஜிஆர் உடனடியாக அவருக்கு அனைத்துலக எம் ஜி ஆர் மன்றத்தில் சென்னை மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கினார்.

1982 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மேல்சபை உறுப்பினராகவும் இருந்துள்ள மதுசூதனன் தொடர்ந்து பின்னாளில் வடசென்னை மாவட்ட செயலாளர், கட்சியின் அமைப்புச் செயலாளர் தற்போது அவைத்தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

தொண்டர்களின் நம்பிக்கை பெற்றவராக அன்றைய காலத்தில் மதுசூதனன் இருந்துள்ளார். அதிமுக தொண்டர்களுக்கு சென்னையில் எங்கே பிரச்சினை என்றாலும் உடனடியாக தலையிட்டு தொண்டர்களின் பக்கம் இருப்பவர் என்பதன் காரணமாக இவருக்கு அஞ்சாநெஞ்சன் என்கிற அடைமொழியோடு தொண்டர்கள் மதுசூதனனை அழைப்பார்கள்.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரு அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா அணியிலிருந்த மதுசூதனன் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக அமைச்சராகவும் ஆனார். மது சூதனுக்கு கைத்தறி துறை இலாகா வழங்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார் மதுசூதனன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்ற முதல் மூத்த உறுப்பினர் மதுசூதனன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் நலம் பெறவேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.
Published by:Karthick S
First published: