விவசாயத்துக்கு பயன்படுத்தும் யூரியாவை வைத்து போலியாக ஹெராயின் தயாரித்து, கோடிக்கணக்கில் லாபம் பார்க்க முயற்சித்த கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
கத்தார் நாட்டில் பணிபுரியும் சையத் என்பவரிடம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர்கள் சிலர் தங்களிடம் ஹெராயின் போதைப் பொருள் மொத்தமாக இருப்பதாகவும் குறைந்த விலையில் அதனை தருவதாகவும் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளனர்.
இதனையடுத்து சென்னை மாதவரத்தில் தான் சொல்லும் கடைக்குச் சென்று போதைப்பொருள்களுடன் காத்திருக்குமாறும் மண்ணடியிலிருந்து ஜமால் நியாஸ் என்பவர் அதனைப் பெற்று உறுதிப்படுத்திவிட்டு பின் பணத்தை கொடுத்து பொருளைப் பெற்றுக் கொள்வதாகவும் கத்தாரில் பணிபுரியும் சையத் கூறியுள்ளார்.
கடந்த 28 ம் தேதி சாம்பிளுக்காக சிறிதளவு ஹெராயின் கொண்டு வந்து ஜமால் நியாஸிடம் கொடுக்க அதனை வாங்கி பரிசோதித்த ஜமால் நியாஸ் உண்மையான ஹெராயின் என சையதுக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதற்கட்டமாக தனக்கு ஒரு கிலோ ஹெராயின் போதைப்பொருள் வேண்டுமென கத்தார் நாட்டில் பணிபுரியும் சையத் ராமநாதபுரத்தை சேர்ந்த போதைபொருள் கடத்தும் நபர்களிடம் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தும் நபர்களும் ஒரு கிலோ போதைப் பொருளுடன் மாதாவரம் 7 டிரஸ் ஷாப்- ல் (7 dress shop) காத்திருந்தபோது, கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்நபர்கள் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த முத்துராஜா (40), தேவகோட்டை ராம் நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(31), நாமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியச் சேர்ந்த தமீம் அன்சாரி(27), மதுரை பகவத்சிங், காமராஜர் சாலைப் பகுதியைச் சேர்ந்த முகமது சபி(29) என்பது தெரியவந்தது.இவர்களிடமிருந்த ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: ஆசைவார்த்தை கூறி மைனர் பெண்ணுடன் உல்லாசம் - பிஸ்கட் வியாபாரி கைது
அப்போது, அவை உண்மையான ஹெராயின் போதைப் பொருள் இல்லை என்பதும், விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியாவை பொடிசெய்து ஹெராயின் எனக்கூறி மோசடி செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து 4 நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இந்த கும்பல் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஹெராயின் போதைப்பொருளை விற்று வந்துள்ளனர் என்பதும் சமீபகாலமாக ஹெராயினுடன் விலைக்குறைவான மாற்று போதைப்பொருட்களை கலவையாக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்து.
இந்த நிலையில் தான் குறைவான முதலீட்டில் அதிக லாபம் பெறுவதற்காக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் யூரியாவுடன் சில வேதிப்பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிதளவு ஹெராயின் கலந்து உண்மையான ஹெராயின் எனக்கூறி விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. உண்மையான ஹெராயின் ஒரு கிலோ கோடிக்கணக்கில் விற்கப்பட்டு வருவதாகவும் தாங்கள் ஒரு கிலோ 25 லட்சத்திலிருந்து விற்பனை செய்து வருவதாகவும் கூறி போலி ஹெராயினை விற்பனை செய்து வருகின்றனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: திமுக கவுன்சிலர்கள் கடத்தல்.. வெடித்த கோஷ்டி பூசல்.. மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி.. பரபரக்கும் கடலூர்..
மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள முத்து ராஜா கடந்த 2020 ஆம் ஆண்டு ஹெராயின் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் இதற்கு முன் யார் யாரிடம் போதை பொருள் விற்பனை செய்துள்ளனர்? போலி ஹெராயின் விவகாரத்தில் இவர்களோடு தொடர்புடையவர்கள் யார்? மேலும் கத்தாரில் பணிபுரிந்து வரும் சையதின் பின்னணி என்ன என்பது குறித்து பெரியமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.