• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது - மா.சுப்பிரமணியன்

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது - மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 2ஆவது தவணை கொரோனா தடுப்பூசியை 29 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் இதுவரை 69 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளதாகவும், இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டுவோம் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 23 லட்சத்து 27 ஆயிரத்து 907 பேருக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 2ஆவது தவணை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 68 ஆயிரத்து 457. முதல் தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 8,59,450 ஆகும். கூடுதலான வகையில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும், இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 69 சதவீதம் பேர். 2ஆவது தவணை தடுப்பூசியை 29 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இந்திய அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் எண்ணிக்கை குறைவு என்றாலும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டுவோம். தடுப்பூசி முகாம்களுக்கு (நேற்று) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் இயங்கும். தடுப்பூசிகள் தற்போது கையிருப்பாக 43 லட்சம் அளவுக்கு உள்ளது இவ்வாறு கூறினார்.

    இந்நிலையில், 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் சனிக் கிழமை நடைபெற்றது. இதில், 23.27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி, இதுவரை நடைபெற்ற 6 மெகா கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் 1.32 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 22ஆம் தேதி வரை 5.16 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மருத்துவ துறை தெரிவித்துள்ளது.

    Must Read : தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ஆம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் 3ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10ஆம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: