மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை - மா.சுப்பிரமணியன்

மா.சுப்ரமணியன்

நியூஸ் 18 செய்தியின் மூலம் அம்பலமாகியுள்ள அனைத்துத் மருத்துவர்களையும் சோதனை செய்வோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  சென்னை சைதாப்பேட்டை ரெட்டிக்குப்பம் சாலை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் 13 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார், அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றபோதிலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

  இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் 44 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 12 சதவீதம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் மொத்தமாக 3 கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 627 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 22 லட்சத்து 17 ஆயிரத்து 54 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இல்லை.

  வருகிற 12ஆம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கக்கப்பட்டுள்ளதால், கூடுதல் தடுப்பூசிகளை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள 9 மாவட்டங்களை இலக்கு வைத்துத்தான் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருக்கிறது. எந்தெந்த பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதோ, அந்த பள்ளிகளுக்கு சீல் வைத்து, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

  பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனாலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். 17 முதல் 18 வயதுக்குள்ளானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று கூறினார்.

  அப்போது வட சென்னையில் போலி மருத்துவர்கள் இருப்பது கள ஆய்வில் தெரியவந்தது தொடர்பாக நியூஸ் 18 செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போலி மருத்துவத்தையும், போலி டாக்டர்களையும், போலி மருந்துகளையும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. இவை கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் உள்ள அனீஸ் அகமத் என்ற யுனானி மருத்துவரின் ஸ்டார் கிலினிக் என்ற இடத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையின் போது அவரின் தகுதிக்கு தொடர்பில்லாத ஆங்கில மருந்துகளையும் அதிகாரிகள் கைபற்றினர். பிறகு, கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.

  Must Read : நியூஸ்18 செய்தி எதிரொலி... 20 ஆண்டுகளாக இருளில் தவித்த மக்களுக்கு கிடைத்த வெளிச்சம்

  மேலும் நியூஸ் 18 செய்தியின் மூலம் அம்பலமாகியுள்ள அனைத்துத் மருத்துவர்களையும் சோதனை செய்வோம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: