Home /News /tamil-nadu /

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 4,200 பேர் பாதிப்பு - மா.சுப்பிரமணியன்

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 4,200 பேர் பாதிப்பு - மா.சுப்பிரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் செயல்படக்கூடிய தடுப்பூசி போடும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 4,200 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் மற்றும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சி.எஸ்.ஆர். நிதி மூலம் 1 கோடி ரூபாய் செலவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய தடுப்பூசி போடும் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 98.3 சதவீதம் பேர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 15 லட்சத்து 74 ஆயிரத்து 477 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகமான சோதனை செய்யப்பட்ட மருத்துவமனையாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விளங்குகிறது. தமிழகத்தில் இதுவரை 4 ஆயிரத்து 200 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 1,714 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது 207 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Must Read : தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 4 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை (நேற்று) 5 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், சோழிங்கநல்லூர் திமுக எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Black Fungus, Corona Vaccine, Ma subramanian, News On Instagram

    அடுத்த செய்தி