• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் மூன்றாவது அலையை சமாளிக்க தேவையான ஆக்சிஜன் உள்ளது : அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழகத்தில் மூன்றாவது அலையை சமாளிக்க தேவையான ஆக்சிஜன் உள்ளது : அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

மா.சுப்ரமணியன்

மொத்தமாக சுமார் 800 மெட்ரிக் டன் அல்லது அதற்கும் குறைவாக தான் மூன்றாவது அலையில் ஆக்சிஜன் தேவை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் புதிதாக நாள்தோறும் ஆயிரும் பேருக்குமேல் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்ற நிலை உள்ளது எனும் சூழலில், தமிழகத்தில் மூன்றாவது அலைக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் போது, ஆக்சிஜன் தேவை உற்பத்தியை விட அதிகமாக இருந்ததால பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழகத்தில் இப்போதும் ஒரு நாளுக்கு 1000 பேருக்கு மேல் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. எனவே மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த அலை போல் அல்லாமல் ஆக்சிஜன் தேவையை கணித்து அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    ஆக்சிஜன் உற்பத்தியின் ஒரு பகுதியாக பல இடங்களில் மருத்துவமனை வளாகத்திலேயே தடையில்லா ஆக்சிஜன் கிடைக்க ஜெனரேட்டர்கள் நிறுவப்படுகின்றன. பிரதமர் நல நிதியின் கீழ் இன்று நாடு முழுவதும் 1,222 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். இதில் தமிழகத்தில் 70 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்த ஜெனரேட்டர்கள் மூலம் சுமார் 90 மெட்ரிட் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து 6,490 படுக்கைகளுக்கு வினாடிக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் வழங்க முடியும்.

    இந்த 70 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களில் தமிழ்நாட்டிலேயே அதிக திறன் கொண்டது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4.2 மெட்ரிக் டன் ஒரு நாளுக்கு உற்பத்தி செய்ய முடியும். இந்த ஜெனரேடரை பிரதமர் காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார். இதே போல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும், செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், தேனி, திருச்சி, கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜெனரேட்டர்கள் திறந்து வைக்கப்பட்டன.

    தேனியில் நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டர் நோயாளிகளுக்கு எப்படி பயனளிக்கும் என்பது குறித்து தேனி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கிக் கூறினார். தமிழகத்தில் இந்த ஜெனரேட்டர்கள் தவிர 152 ஜெனரேட்டர்கள் உள்ளன. இவற்றில் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்புடன் 77 ஜெனரேட்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் 61 ஜெனரேட்டர்கள், ரயில்வே வாரிய மருத்துவமனையில் நான்கு, என்.எல்.சி. மருத்துவமனையில் 10 ஜெனரேட்டர்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 222 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் மூலம் சுமார் 200 மெட்ரின் டன் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

    பிரதமர் மோடி


    இந்நிலையில், தமிழகத்தின் ஆக்சிஜன் தயாரிப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் நியூஸ்18க்கு அளித்த பேட்டியில், இரண்டாவது அலையின் உச்சத்தில் சுமார் 530 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. தற்போது 100 மெட்ரிக் டன்னுக்கு கீழ் தான் தேவை உள்ளது. எனினும் மூன்றாவது அலை என்ற அச்சுறுத்தல் இருப்பதால் முதலமைச்சர் உத்தரவுபடி சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்புடன் 77 இடங்களில், தனியார் மருத்துவமனைகளில் 61 ஜெனரேட்டர்கள், ரயில்வே, நிலக்கரி போன்ற இடங்களில்14 ஜெனரேட்டர்கள் உள்ளன.

    பிரதமர் நலநிதியிலிருந்து 70 ஜெனரேட்டர்கள் உள்ளன். இவை மட்டுமல்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்கள், கான்சண்ட்ரேட்டர்கள் ( concentrator) கொண்டு ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள ஆக்சிஜ்ன் ஆலைகள் மூலம் சுமார் 450 மெட்ரின் டன் உற்பத்தி செய்வதற்கான திறன் உள்ளது. இவை தவிர மத்திய தொகுப்பிலிருந்து 200 மெட்ரிக் டன் மாநிலத்துக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.



    Must Read : கார் மோதி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்... ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது உ.பி அரசு

    மொத்தமாக சுமார் 800 மெட்ரிக் டன் அல்லது அதற்கும் குறைவாக தான் மூன்றாவது அலையில் ஆக்சிஜன் தேவை இருக்கும் என சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க, ஆக்சிஜன் தேவை இன்னும் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே மூன்றாவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது என தமிழக அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: