குறைந்தபட்ச வருமானத் திட்டம் ஒரு மைல்கல்! ராகுல் காந்தி வாக்குறுதிக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

எது எப்படி வந்தாலும், அடுத்து தமிழகத்தை ஆட்சி செய்யவிருக்கும் கட்சி, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லவிருக்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்ற நம்பிக்கையில் நீங்கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறீர்கள்.

குறைந்தபட்ச வருமானத் திட்டம் ஒரு மைல்கல்! ராகுல் காந்தி வாக்குறுதிக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: January 29, 2019, 10:13 PM IST
  • Share this:
ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அரூர் தொகுதியில் ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர், ‘பொதுவாக கிராமம் என்று சொன்னால், கோயில் என்று மகாத்மா காந்தி சொல்லி இருக்கிறார். எனவே, இன்றைக்கு நான் கோவிலுக்கு வந்திருக்கின்றேன்.

தி.மு.கவைப் பொறுத்த வரையில் இப்போது ஆட்சியில் இல்லை. ஆனால் ஆட்சியில் இல்லாத இந்த நேரத்திலும் தி.மு.க தான் ஆட்சியில் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் இடத்தில் இருக்கின்றது.


ஆனால், ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது, உட்கார்ந்து இருக்கிறது. உட்கார்ந்து இருக்கிறது என்று கூட சொல்ல கூடாது. படுத்துக்கொண்டு இருக்கிறது, படுத்துக்கொண்டு இருக்கிறது என்று கூட சொல்ல முடியாது.

அது ஒரு ICU வார்டில் ஹாஸ்பிட்டலில் இருக்கிறது. ICU வார்டில் படுத்திருந்தால் கூட மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து காப்பாற்றி விடுவார்கள். கோமா நிலையில் இருக்கின்றது எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் லாயக்கில்லாத நிலையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு, மத்தியில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் மோடியினுடைய பினாமி ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்த ஆட்சிக்கு பெரும்பான்மை கிடையாது.

அனைவரும் இன்றைக்கு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் மட்டும் வரப்போகிறதா? அல்லது இடைத்தேர்தலும் சேர்ந்து வரப்போகிறதா? இல்லை, 234 தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் வரப்போகிறதா? எனத் தெரியவில்லை. எது எப்படி வந்தாலும், அடுத்து தமிழகத்தை ஆட்சி செய்யவிருக்கும் கட்சி, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லவிருக்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்ற நம்பிக்கையில் நீங்கள் அனைவரும் இங்கு வந்திருக்கிறீர்கள்.ஒரு வருடமாக 18 தொகுதிகளில் எம்எல்ஏ இல்லாத ஒரு சூழல். தேர்தல் நடத்தினால் தி.மு.க தான் வெற்றி பெறும் என்று திட்டமிட்டு இந்த ஆட்சி மத்திய அரசோடு தொடர்பு வைத்துக்கொண்டு, தேர்தல் கமிஷனோடு ஒரு தொடர்பு வைத்துக் கொண்டு இந்த இடைத்தேர்தலை திட்டமிட்டு தள்ளி வைத்துக் கொண்டே போகின்றார்கள். எப்போது வந்தாலும் அதில் தி.மு.கதான் நிச்சயம் வெற்றியைப் பெறும். அதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.

இந்த மாவட்டத்தைப் பொறுத்த வரையில், இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்தோம். ஆனால், இன்றைக்கு அதனை முழுமையாக கூட கொடுக்க முடியாத நிலையில் தான் இந்த ஆட்சி இருந்து கொண்டிருக்கின்றது. இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நான் முன் மொழிந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

அவர், ஒரு கனவுத்திட்டத்தை அறிவித்திருக்கின்றார். ஒரு அருமையான திட்டம். ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்ற திட்டம். இது வறுமை ஒழிப்பில் மைல் கல்லாக அமையப்போகின்றது என்பதை மாத்திரம் நான் இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய திட்டமாக உருவாக இருக்கின்றது. இந்தத் திட்டத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் சிறப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்’என்று தெரிவித்தார்.

Also see:

First published: January 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்