Home /News /tamil-nadu /

பிரபாகரன் ஆன்மா சாந்தி அடையும்.. இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியீடு

பிரபாகரன் ஆன்மா சாந்தி அடையும்.. இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சே குறித்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியீடு

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

 அன்று ஈழ மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி வயிறு எரிந்து சாபம் விட்டார்களோ அதன் விளைவாகதான் இன்று ராஜபக்சேவின் கொடுமையான ஆட்சியும் இலங்கையும் தீப்பற்றி எரிகிறது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

    அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த  மகிந்த  ராஜபக்சேவுக்கு சிங்கள மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு அன் அனைவராலும் வரவேற்கக் கூடியது என்றும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆன்மா சாந்தி அடையும் என்றும் தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி நேற்று பாரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.

    அப்போது ஆளுங்கட்சி ஆதரவு குண்டர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதினர். ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. இதையடுத்து மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீடு தீவைத்து எரிக்கப்பட்டது.

    ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்சேவின் நினைவிடத்தையும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். உயிருக்கு அச்சம் உள்ள காரணத்தால், அலரி மாளிகையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகிந்த ராஜபக்சே வெளியேறினார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: ராஜபக்சே வெளிநாடு செல்ல திட்டம்? விமான நிலையம் அருகே காத்திருக்கும் இலங்கை மக்கள்


    இதன் காரணமாக ரத்மலான விமான நிலையம் அமைந்துள்ள சாலை அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக்கூடாது என்பதால் விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் அவர்கள் சோதனையிட்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் மாளிகையில் இருந்து தப்பி செல்லும் வீடியோவும் சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ளது. தற்போது ராஜபக்சே எங்கு உள்ளார் என்பது தெரியாத சூழல் நிலவுகிறது.

    இந்நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், உலகம் முழுவதும் வாழும் அன்பு தமிழ்  சொந்தங்களுக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் பணிவான வணக்கங்கள் தெரிவித்து கொள்கிறேன். தமிழினத்தை படுகொலை செய்த இரக்கமற்ற ராஜபக்சவிற்கு இறைவன் கொடுத்த தீர்ப்பாக்கவே இந்த நாளை நான் பார்க்கிறேன். ஒரு இனத்திற்காக போராடிய நமது அன்பு சகோதரர் போராளி பிரபாகரன் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் அப்பாவி தமிழீழ மக்களையும் படுகொலை செய்த தமிழ் இனத்தையே அழித்த ராஜபக்சே இன்று அந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்படும் காட்சிகளை நாம் பார்க்கிறோம்.


    இன்றைக்கு தான் உண்மையிலேயே தமிழ் மக்கள் வெற்றி பெற்றதாக நான் கருதுகிறேன். விடுதலைப் புலிகள் பிரபாகரன் அவர்களுடைய படுகொலையையும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து பல வழிகளில்  கொடுமைப்படுத்தி கொலை செய்த ராஜபக்சேவுக்கு சிங்கள மக்களே கொடுத்த தீர்ப்பு அனைவரும் வரவேற்கக் கூடிய ஒரு விஷயம்.

    பொருளாதார நலிவு மற்றும் பல கலவரங்கள் இலங்கையில் ஏற்பட்டு இலங்கையே தீக்கு இரையாகி கொண்டு இருக்கிறது. அன்று ஈழ மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி வயிறு எரிந்து சாபம் விட்டார்களோ அதன் விளைவாகதான் இன்று ராஜபக்சேவின் கொடுமையான ஆட்சியும் இலங்கையும் தீப்பற்றி எரிகிறது. இன்றைக்கு தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மற்றும் தமிழ் ஈழமக்களின் ஆத்மாவும் சாந்தி அடைந்திருக்கும். இந்த வெற்றியை உலக நாடுகளில் இருக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்" என்று கூறியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Mahinda rajapaksa, Premalatha Vijayakanth, Srilanka

    அடுத்த செய்தி