முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார்' - தஞ்சாவூரில் பரபரப்பு தகவலைச் சொன்ன பழ. நெடுமாறன்

'பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார்' - தஞ்சாவூரில் பரபரப்பு தகவலைச் சொன்ன பழ. நெடுமாறன்

பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. என்றாலும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று தமிழ் தேசிய அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன்,  “பிரபாகரன் பற்றிய ஒரு உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்த சூழலும் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுதும் தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும் - ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் கூறிய பழ.நெடுமாறன், “தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் கால் ஊன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்த காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்று பட்டு நின்று பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். பிரபாகரன் அவர்களின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன்” என்று கூறினார்.

மேலும், “பிரபாகரன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உலகம் முழுவதும் உள்ள நம்முடைய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விரைவில் அவர் வெளிப்படுவார், அதை உலகம் அறிந்து கொள்ளும்” என்று கூறினார்.

First published:

Tags: LTTE, Prabhakaran