சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு - லயோலா கல்லூரி விளக்கம்

சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு - லயோலா கல்லூரி விளக்கம்

தேர்தல்

2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு எதுவும் நடத்தவில்லை என்று லயோலா கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தமுறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கிடையே போட்டி நிலவி வரும் நிலையில் ஜெயிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்களிடத்தில் பேசுபொருளாகியுள்ளது.

  தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதில் லயோலா கல்லூரி பெயரைப் பயன்படுத்தி ஒரு சிலர் தவறான தேர்தல் கருத்து கணிப்புகளை சமூகவலைதளங்களில் பரப்பி வருவதை அறிந்து கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “லயோலா கல்லூரி 2021- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எந்த வகையிலும் கருத்துக் கணிப்பு நடத்தவில்லை என்று இதன்மூலம் அறிவிக்கின்றனது. தேர்தல் போக்குகளைப் பற்றிய விமர்சனங்களை வழங்குவதில் கல்லூரி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பயிற்றாப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  எனவே லயோலா கல்லூரி என்ற பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வழங்கப்பட்டால் ஊடக நண்பர்கள் அதனைப் புறக்கணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்தல் போக்குகளை வெளியிட சென்னை லயோலா கல்லூரி என்ற பெயரைப் பயன்படுத்தும் தனிநபர்களையும் மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: