இன்ஸ்டாகிராம் காதல், கஞ்சா போதை, கல்லூரி படிப்பு! கஞ்சாவுக்காக செல்போன் திருடிய பெண்ணின் வாக்குமூலம்

வாகனம் ஓட்டிச் சென்றவர் லிப்சாவின் கையில் இருந்த செல்போனை வெடுக்கென பறித்து வாகனத்துடன் மாயமானார்.

இன்ஸ்டாகிராம் காதல், கஞ்சா போதை, கல்லூரி படிப்பு! கஞ்சாவுக்காக செல்போன் திருடிய பெண்ணின் வாக்குமூலம்
செல்போன் பறித்த சிசிடிவி காட்சிகள்
  • Share this:
சென்னையில், இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, பின் காதலர்களாக மாறிய ஒரு ஜோடி, கஞ்சா போதைக்கு அடிமையாகி, போதைப் பொருட்கள் வாங்குவதற்காக செல்போன் பறிப்பிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 

சென்னையில், செயின்பறிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. இதுவரை செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் கஞ்சா போதைக்காக காதல் ஜோடி ஒன்று, சாலையில் நடந்து செல்வோரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், காதலி ஒரு தனியார் கல்லுாரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி என்பதுதான்.

எப்படி சிக்கியது இந்த காதல் ஜோடி?


சென்னை தேனாம்பேட்டையில் திங்கட்கிழமை அன்று காலை 7:45 மணியளவில், பிரசன்னா லிப்சா என்பவர் தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் வேகத்தில் அவரருகே ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது.

வாகனம் ஓட்டிச் சென்றவர் லிப்சாவின் கையில் இருந்த செல்போனை வெடுக்கென பறித்து வாகனத்துடன் மாயமானார். லிப்சா வாகனத்தைக் கவனித்தபோது அதிர்ச்சி அடைந்தார். வாகனம் ஓட்டிச் சென்றவரின் பின்னால் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார்.

இதையடுத்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் லிப்சா புகாரளித்தார். போலீசார் இதுகுறி்த்து பிற காவல்நிலையங்களைத் தொடர்பு கொண்டு விசாரி்த்தபோது அண்ணாநகர், சேத்துப்பட்டு காவல்நிலைய எல்லைகளில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவானது தெரியவந்தது.

இதையடுத்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சைதாப்பேட்டையில் தனியார் விடுதியில் பதுங்கியிருந்த ஒரு காதல் ஜோடியை போலீசார் கைதுசெய்தனர். விசாரணையில் அவர்கள் அளித்த தகவல்கள் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்தன.

யார் இந்த காதல் ஜோடி? குற்றச் செயல்களில் இவர்கள் ஈடுபட்டது எப்படி?

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் 29 வயதான ராஜு; இவர் டாட்டூ எனப்படும் பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கரூரைச் சேர்ந்தவர் 20 வயதான ஸ்வாதி; இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் விஸ்காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ராஜுவுக்கும் ஸ்வாதிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.சென்னையின் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடி அவற்றை விற்று கஞ்சா புகைப்பதை பழக்கமாக கொண்டிருந்தார் ராஜு. நாளடைவில் தனது காதலி ஸ்வாதிக்கும் கஞ்சா போதையை அறிமுகப்படுத்தினார் ராஜு.

கல்லுாரி விடுதி அறையில் மது பயன்படுத்தியதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் ஸ்வாதி. ஸ்வாதிக்காக சைதாப்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து அவருடன் தங்கி வந்தார் ராஜு. ராஜு மீது வடபழனி காவல்நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருந்து ஒரு இருசக்கர வாகனத்தைத் திருடியுள்ளார் ராஜு. கடந்த 12-ம் தேதி அந்த வாகனத்தில் சென்ற ராஜு காலை 7 மணியளவில் கிண்டியில் நடந்து சென்ற ஒரு நபரிடம் செல்போன் பறித்துள்ளார்.பின்னர் சைதாப்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த காதலி ஸ்வாதியை தனது வாகனத்தின் பின்னால் அமர்த்திக் கொண்டு தேனாம்பேட்டை வழியாக சென்றுள்ளார். அங்கு நடந்து சென்ற லிப்சாவிடம் செல்போன் பறி்த்துள்ளது காதல் ஜோடி. அந்த செல்போனையும் ஏற்கனவே கிண்டியில் பறித்த செல்போனையும் பாரிமுனை பர்மா பஜாரில் விற்றுள்ளார் ராஜு.

விற்று கிடைத்த பணத்தில் கஞ்சா, மது வாங்கிக் கொண்டு காதல் ஜோடி தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளனர். பகல் நேரத்தில் கல்லுாரியில் படிப்பு, மாலை மற்றும் இரவில் காதலனுடன் விடுதியில் கஞ்சா கொண்டாட்டம் என்று இருந்துள்ளார் கல்லுாரி மாணவி ஸ்வாதி.

காதலனுடன் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு ராஜு ஓட்டிச் சென்ற பைக்கின் பதிவெண் கிடைத்தது. அதை வைத்து விசாரித்த போது அது வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் இருந்து திருடப்பட்ட வாகனம் எனத் தெரியவந்தது.

வாகனத் திருடர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜு தனது காதலி ஸ்வாதியுடன் பைக்கில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின்படி ராஜு தங்கியிருந்த விடுதிக்கு போலீசார் சென்றபோது அவர் திருடி வந்த வாகனம் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதையடுத்து விடுதியில் தங்கியிருந்த ராஜுவையும் அவரது காதலி ஸ்வாதியையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கஞ்சா போதைக்காக வாகனங்கள், செல்போன்கள் திருடி அவற்றை விற்று இருவரும் உல்லாசம் அனுபவித்தாக வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டனர்.

Watch

First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்