LOVE ISSUE BOY FRIEND HOUSE AND HOTEL ATTACKED BY LOVERS BROTHER IN THOOTHUKUDI VAI
காதலியின் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட காதலன்... கொந்தளித்து ஹோட்டல் மீது தாக்கிய சகோதரன்
காதலிக்குத் திருமணம் நிச்சயமான நிலையில், முத்துப்பிரகாஷின் ஓட்டல் மற்றும் வீடு மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது. தாக்கியது காதலியின் சகோதரர் தான் எனக் குற்றம்சாட்டியுள்ளார் முத்துப்பிரகாஷ், சம்பவத்தின் முழுப் பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர், 26 வயதான முத்துப்பிரகாஷ். பிஇ பட்டதாரியான இவர் புதுரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இளம்பெண் ஆசிரியர் பயிற்சி முடித்து, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இந்த நிலையில் காதலியின் ஆலோசனையின் பேரில், முத்துப்பிரகாஷ், அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.
ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலியின் தந்தை சம்மதிக்கவில்லை. மேலும் பெண் வீட்டார், பெண்ணுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தத்தையும் முடித்துள்ளனர். இதற்கிடையே அந்த மாப்பிள்ளைக்கு முத்துப்பிரகாஷ், தானும் காதலியும் இருக்கும் படங்களை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை ரத்து செய்து விட்டனர்.
இந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி மர்ம நபர்கள் சிலர், முத்துப்பிரகாஷ் வீடு மற்றும் ஓட்டலில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். காதலியின் சகோதரரான பேச்சிப்பாண்டி என்பவர், தனது ஆதரவாளர்களுடன் வந்து தாக்கியதாக முத்துப்பிரகாஷும் அவரது தந்தை அரசகுமாரும் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.
இதற்கிடையே, பெண் வீட்டார் தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால் போலீசார் தனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி, முத்துப்பிரகாஷ் வெளியிட்டுள்ள ஆடியோ அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் முத்துப்பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், பெண்ணின் சகோதரர் பேச்சிப்பாண்டி உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.