`தமிழகத்தில் மீண்டும் லட்டரி விற்பனை தொடங்கப்போகிறது’ என்று பரவும் தகவல் இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் லாட்டரியை கொண்டு வந்து ஏழை எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தை சீரழித்தார். அப்போதுதான் வெளிமாநில லாட்டரிகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டது.
ஒரு சீட்டின் விலை 10 ரூபாய் என்றும் , பரிசு ஒரு கோடி என்றும் மக்களிடையே பேராசை தூண்டப்பட்டது. ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம், மாதம் ஒருமுறை குலுக்கள் என்ற நிலை மாறி, ஒரு நம்பர் லாட்டரி முதல் பல கோடி ரூபாய் வரை பரிசு என்று ஒரு நாளைக்கு குறைந்தது 50 விதமான லாட்டரிகள் விற்பனை தமிழகத்தில் நடைபெற்றது.
இதன்காரணமாக குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல் லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது. தனியார் லாட்டரி ஏஜெண்ட்டுகள், வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை, கள்ள நோட்டு அச்சடிப்பது போல் அச்சிட்டு மக்களிடம் விற்றார்கள். உடனடியாக கோடீஸ்வரர்கள் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பாவி ஏழை, எளிய மக்கள், லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும், வாழ்வையும் இழந்தார்கள். இந்தத் தீமை, சமுதாயத்தில் புரையோடிப் போய் பல ஆண்டுகள் நம் மக்களை சீரழித்தது. பல்வேறு காலக்கட்டங்களில் தனியார் லாட்டரியால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நிகழ்ந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2001-ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்த பின் லாட்டரி கொள்ளையரின் பிடியில் இருந்து மக்களைக் காக்க அம்மா முடிவு செய்தார். 2003-, ஆண்டு ஜனவரி மாதம் அரசு கொள்கை முடிவு எடுத்து. ஒரே கையெழுத்தில் ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழத்தில் ஒழித்த பெருமை அம்மாவையே சாரும்.
இந்த சட்டத்திற்கு எதிராக லாட்டரி கொள்ளையர்கள் உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து தோல்வியை சந்தித்தார்கள்.
இந்நிலையில் மக்களின் தலையில் மண்ணை வாரிக்கொட்ட சந்தர்ப்பவசத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள திமுக-வின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வருகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசுக்கு வருவாயைப் பெருக்கும் வழி எங்களுக்குத் தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தனியார் லாட்டரி ஏஜெண்ட்டுகள் கொள்ளை அடிக்கவும், அதன்மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமான, இந்த அதிகாரப்பூர்வ லாட்டரி சீட்டு திட்டத்தை தி.மு.க அரசு கைவிட வேண்டும். அரசின் வருவாயைப் பெருக்க வேறு பல நல்ல வழிகளைத் தேட வேண்டும். தமிழகத்தின் ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற அம்மா ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும் எனவே லாட்டரி சீட்டை மீண்டும் இந்த அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டாம் என கழகத்தின் சார்பில் எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, Edappadi Palanisami, Lottery, Tamilnadu