• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டீசல் விலை உயர்வு: லாரி உரிமையாளர்கள் மார்ச் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வு: லாரி உரிமையாளர்கள் மார்ச் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

இந்தியாவில் 18 மாநிலங்களைவிட தமிழகத்தில் டீசல் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

  • Share this:
    டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் இம்மாதம் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், மார்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

    தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தலைமை வகித்தார். தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார்.

    இது குறித்து சண்முகப்பா கூறுகையில், "இந்தியாவில் 18 மாநிலங்களைவிட தமிழகத்தில் டீசல் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு என்பது சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். லாரி உரிமையாளர்கள் வாழ்வா, சாவா என்று வாழ்ந்துகொண்டு வரும் சூழலில், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. டீசல் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு 'வாட்' வரியைக் குறைக்க வேண்டும்.

    ஃபாஸ்டேக் முறையினால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளில் தனியாகப் பணம் செலுத்திட ஏதுவாக ஒரு வழியைக் கொடுக்க வேண்டும். பல சுங்கச்சாவடிகளின் காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். 15 ஆண்டுகள் ஆன வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவால், தென் மாநிலங்களில் 6 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்படும்.

    எங்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு, லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேச வேண்டும். கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மார்ச் 15ஆம் தேதி, பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில், தென்மாநில லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்வோம்.

    மத்திய அரசு டீசல் விலையையும், மாநில அரசு வாட் வரியையும் 15 நாட்களுக்குள் குறைக்க வேண்டும். கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு முன்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

    மத்திய அரசின் புதிய அறிவிப்பான 15 ஆண்டுகளான வாகனங்களை அழிக்கும் முயற்சியைக் கைவிடாவிட்டால் பல லட்சம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவர். லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, வணிகர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.

    Must Read : பஞ்சாப், ஹரியானாவில் பல்வேறு இடங்களில் ரயில்களை மறித்த விவசாயிகள் - போலீசார் குவிப்பு

     

    மாற்று வழிக்குச் செல்லுங்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கூறியுள்ள நிலையில், அவர் எத்தனால், கேஸ் ஆகிய மாற்று எரிசக்தியைப் பயன்படுத்திட அறிவித்தால் லாரி உரிமையாளர்கள் பின்பற்றத் தயாராக இருக்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: