NPR-ல் பண்டிகைகள் பற்றி கேட்கப்படுவது ஏன்? சட்டப்பேரவையில் கொதித்த மு.க.ஸ்டாலின்; ஓ.பி.எஸ் பதில்

NPR-ல் பண்டிகைகள் பற்றி கேட்கப்படுவது ஏன்? சட்டப்பேரவையில் கொதித்த மு.க.ஸ்டாலின்; ஓ.பி.எஸ் பதில்
Stalin
  • Share this:
சட்டப்பேரவையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கடந்த கூட்டத்தொடரில் நான் விடுத்த கோரிக்கை ஆய்வில் இருப்பதாக சொன்ன சபாநாயகர் இந்த முறையும் அதற்கு அனுமதி மறுப்பதாக தெரிவித்தார்.

குடியுரிமைச் சட்டத் திருத்ததால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் நாங்கள் பதில் சொல்கிறோம் என முதல்வர் பேசிய நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். அதே போல என்.பி.ஆரை தமிழகத்தில் அறிமுகப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


அதற்கு பதிலளித்து பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 14 கேள்விகள் கேட்கப்படுவதாகவும், வாக்கு வங்கிக்காக மக்களை திசைதிருப்பும் செயல்களில் சிலர் ஈடுபட்டுவருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், என்.பி.ஆரில் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றான தாங்கள் கொண்டாடும் பண்டிகை விவரங்கள் கேட்கப்படுவதாகவும் தமிழகத்தில் என்.பி.ஆரை அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதியை தமிழக அரசு வழங்குமா என மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தமிழக அரசு அரணாக விளங்கும் எனவும், என்.பி.ஆர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது தி.மு.க ஆட்சிக்காலத்தில் தான் என பதிலளித்தார்.தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், நாங்கள் இருந்த காலத்தில் இதுபோன்ற தகவல்கள் எல்லாம் கேட்கப்படவில்லை எனவும் அசாம் மாநிலத்தில் இந்த சட்டத்தால் 19 லட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைவருக்கும் அதே நிலைதான் ஏற்படும் எனவும் துரைமுருகன் பேசினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பேசுவதில் வல்லவர் எனவும் தமிழக மக்களுக்கு பல்வேறு மாற்றங்களை எற்படுத்தியவர் எனவும் பேசினார். அதே நேரத்தில் வாக்கு வங்கிக்காக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரோ என அச்சம் எழுந்திருப்பதாக தெரிவித்தார்.

இறுதியாக பேசிய தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாங்கள் பக்ரீத், ரம்ஜான், பொங்கல், தீபாவளியையும் கொண்டாடுவதாக கூறி நீண்ட நேர விவாதத்தை முடித்து வைத்தார்.

பின்னர், பட்ஜெட் உரை மீது பதிலளித்து பேச துணை முதலமைச்சர் ஓ பணீர்செல்வம் எழுந்த போது குறுக்கிட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், "தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத காரணத்தால், நிதியமைச்சர் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக" அறிவித்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் அபூபக்கர், தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

Also see:

First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading