ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெய்வேலி முந்திரி வியாபாரி உயிரிழந்த விவகாரம்: மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது..

நெய்வேலி முந்திரி வியாபாரி உயிரிழந்த விவகாரம்: மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது..

நெய்வேலி முந்திரி வியாபாரி உயிரிழந்த விவகாரம்: மீண்டுமொரு சாத்தான்குளம் சம்பவமா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது..

நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் விருத்தாச்சலம் கிளைச்சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகத்திற்கும், செல்வமுருகனுக்கும் இடையே இருந்த முன்விரோதம் தான் காரணமா?

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்தவர் செல்வமுருகன். 39 வயதான இவர், முந்திரி விவசாயம் செய்து வந்தார். இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கடந்த மாதம் 30-ஆம் தேதி செல்வமுருகனை கைது செய்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

  இதையடுத்து, கடந்த 2-ஆம் தேதி அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 4-ஆம் தேதி செல்வமுருகனுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்ட போது, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  ஆனால், தனது கணவரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக செல்வமுருகன் மனைவி பிரேமா குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், அவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், தங்களிடம் தெரிவிக்காமல் உடலை பிரேத பரிசோதனை செய்ததாகவும் கூறியுள்ளார். எனவே, மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  இதனிடையே, விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .

  இதற்கிடையில், அக்டோபர் 30-ஆம் தேதி நகைப் பறிப்பில் செல்வமுருகன் ஈடுபட்டார் என போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், 29ஆம் தேதியே அவரை, நகையை பறிமுதல் செய்வதாகக் கூறி, நகைக்கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற காட்சி, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இந்த காட்சி வெளியானதை அடுத்து, உண்மை கண்டறியும் குழுவினர், நகைக்கடைக்குச் சென்று, ஆதாரங்களை கைப்பற்ற முயற்சித்தனர்.

  அதை தடுக்கும் வகையில், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய காவலர் செந்தில் என்பவர் நகைக்கடைக்குச் சென்று அங்கு பணியில் இருந்த பெண்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ளார்.

  இந்த நிலையில் உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் - முந்திரி வியாபாரி செல்வமுருகன் இடையே முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

  இதனாலேயே 28ஆம் தேதியே செல்வமுருகனை பிடித்த போலீசார், முந்திரி வியாபாரி காணாமல் போனதாக மனைவி கொடுத்த புகாரை எடுக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில், நீதிமன்ற காவலில் உயிரிழந்த செல்வமுருகன் மரணம் தொடர்பாக, தற்போது வெளியாகியுள்ள ஆதாரங்களை பெற்று, விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க...தாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மகன்: கர்நாடகாவில் கொடூரம்

  இதனிடையே, தனது கணவர் கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வமுருகனின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தின் வடு மனதில் இருந்து கரையும் முன்பே, அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Lockup death, Murder case, Neyveli, Sathankulam