Home /News /tamil-nadu /

ஃபேஸ்புக் நேரலையில் திருமண நிகழ்வைப் பகிர்ந்த கோவை மணமக்கள்.. உணவின்றி தவிக்கும் 2000 பேருக்கு சாப்பாடு!!

ஃபேஸ்புக் நேரலையில் திருமண நிகழ்வைப் பகிர்ந்த கோவை மணமக்கள்.. உணவின்றி தவிக்கும் 2000 பேருக்கு சாப்பாடு!!

கோவை புதுமணத் தம்பதி.

கோவை புதுமணத் தம்பதி.

2000 பேருக்கு தயார் செய்யப்பட்ட உணவை, குருடம்பாளையம் ஊராட்சியோடு இணைந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு இவர்கள் வழங்கினர்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், தமது திருமணத்தை முகநூல் நேரலையில் உறவினர்களுக்குப் பகிர்ந்துள்ளனர் கோவையைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பல்வேறு தரப்பினரையும் முடக்கியுள்ளது. இதனால் ஆடம்பரமாக நடைபெற இருந்த பல்வேறு திருமணங்கள் எளிமையான முறையில் குறைந்த நபர்களோடு நடந்து வருகின்றன. கோவை துடியலூர் அருகேயுள்ள குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் பாபு என்ற பொறியாளரும், பிரவீனா என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், விக்னேஷ் பாபு வித்தியாசமான முறையில் தனது திருமண பத்திரிகையை வெளியிட்டார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ”ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் எளிய முறையில் வீட்டிலேயே திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு நிலைமை சீரடைந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கின்றோம். திருமணத்தை நேரடியாக பேஸ்புக் லைவ் மற்றும் யூடியூப்பில் காணுங்கள். மணமக்களை ஆசிர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... #covid19 #staysafe #stayhome.”

இதன்படி இன்று குருடம்பாளையம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விக்னேஷ்பாபு - பிரவீனா திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. குறைவான ஆட்கள் கலந்து கொண்ட நிலையில், முகநூல் நேரலையில் திருமணத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பகிர்ந்தனர். அவர்கள் முகநூலில் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதையடுத்து 2000 பேருக்கு தயார் செய்யப்பட்ட உணவை, குருடம்பாளையம் ஊராட்சியோடு இணைந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு வழங்கினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினருக்கு புதுமணத் தம்பதிகள் நேரடியாக சென்று உணவு வழங்கினர்.

ஆடம்பரமாக மண்டபத்தில் நடைபெற இருந்த திருமணம் கொரோனா காரணமாக எளிமையாக நடந்ததாகவும், ஊரடங்கு முடிந்த பின்னர் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாகவும் புதுமணத் தம்பதிகள் தெரிவித்தனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Coimbatore, Marriage

அடுத்த செய்தி