Tamil Nadu Lockdown : தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

ஊரடங்கு

நோய் பரவல் அதிகம் இருக்கும் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, நோய் பரவல் அதிகம் இருக்கும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், பிற மாவட்டங்களில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    என்னென்ன தளர்வு?


    மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கீழ்காணும் செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடைபாதை காய்கறி கடைகள் (Image: Jedraszak / Shutterstock.com)


    அதன்படி,
    1. மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி , மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது

    2. காய்கறி, பூ, பழம் விற்கும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது

    3. எலெக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி, எந்திரங்கள் பழுது நீக்குபவர்கள் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 முதல் மாலை 5 வரை இ - பதிவுடன் அனுமதிக்கப்படுவர்

    4. மின்சார பொருட்கள் விற்கும் கடைகள், மிதிவண்டி, டூவீலர் பழுது பார்க்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடைகள் , ஸ்டேசனரி கடைகள், வாகன சர்வீஸ் மையங்கள் ஆகியவை காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது

    இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை (Image: balajisrinivasan / Shutterstock.com)


    5. டாக்ஸி, ஆட்டோக்களில் பயணிக்க இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது. டாக்ஸிக்களில் ஓட்டுநரை தவிர மேலும் 3 பேரும், ஆட்டோக்களில் இரண்டு பேரும் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    தொற்றுபாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் விற்கும் கடைகள், நடைபாதை கடைகள் மட்டும் காலை 6 முதல் மாலை 5 வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    கடையை திறக்கும் வியாபாரி
    கடையை திறக்கும் வியாபாரி (IMAGE: Gawadi / Shutterstock.com)


    வெளியூர் போகலாமா ?

    பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்காததால், வெளியூர் செல்வோர், உரிய காரணங்களுக்காக மட்டு இ-பதிவு செய்து வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    எலெக்டிரிசியன், டெக்னிசியன், ப்ளம்பர், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோர் தாங்கள் இ-பதிவு செய்த பின் வாகனங்களில் செல்ல தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்
    Published by:Suresh V
    First published: