தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்த பொது ஊரடங்கு, டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :
1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
2) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும்,அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
3) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள்,விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
4) வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.
5) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.
6) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
7) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1.12.2020 முதல் 31.12.2020 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.
8) வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கொள்வதாக, முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, December, Lockdown, Unlock