எந்தெந்த உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்?

எந்தெந்த உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்?
  • Share this:
உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டால் எந்தெந்த பதவிகளுக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பார்கள்? எந்தெந்த பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கும் ?

தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில் மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளின் தலைவர்கள் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பல பதவிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல பதவிகள் உள்ளன.

இவற்றில் இதுவரை மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கும். பொது மக்கள் வாக்களித்து இவர்களை தேர்வு செய்வர்.


நகர்ப்புறங்களில் இரண்டு ஓட்டுக்களையும் ஊரகப் பகுதிகளில் 4 ஓட்டுகளையும் வாக்காளர்கள் பதிவு செய்ய வேண்டி இருந்தது. துணை மேயர், துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு கவுன்சிலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து அவர்களை தேர்வுசெய்தனர்.

ஆனால், தற்போது கொண்டுவரப்படும் மறைமுகத் தேர்தல் என்ற மாற்றத்தின் படி, ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய இடங்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரை தேர்வு செய்வார்கள்.நகர்ப்புற உள்ளாட்சிகளைப் பொருத்தவரை, மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோரை மட்டும் மக்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் சட்டபூர்வ நிலைக்குழுக்கள் ஆகியவற்றை தேர்வு செய்வார்கள். புதிய முறையின்படி, நகர்ப்புறங்களில் ஒரு வாக்கையும், ஊரகப் பகுதிகளில் 4 வாக்குகளையும் வாக்காளர்கள் பதிவு செய்ய வேண்டும்.
First published: November 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்