Home /News /tamil-nadu /

உள்ளாட்சித் தேர்தல்: வெள்ளிக்கிழமை முதற்கட்ட வாக்குப்பதிவு

உள்ளாட்சித் தேர்தல்: வெள்ளிக்கிழமை முதற்கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. சுமார் 60 ஆயிரம் காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், நெல்லை உட்பட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

4700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 37830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்கள் மற்றும் 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. வாக்களிப்பதற்காக 24680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தலில் மட்டும் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

702 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 13062 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் 27 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 60 ஆயிரம் காவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஒவ்வொரு வாக்காளர்களும் 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவினை வீடியோவாக பதிவு செய்வதுடன், வெப் கேமராக்கள் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Published by:Yuvaraj V
First published:

Tags: Local Body Election 2019

அடுத்த செய்தி