திருச்சி மாவட்ட கிராம ஊரக உள்ளாட்சி தேர்தல் பதவிகளில் முதல் முறையாக 100 சதவீதம் பெண்களே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கடந்த 9ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்று வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 4,077 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மொத்தமுள்ள 404 ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் 4 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல் 3,408 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளில் 486 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி மணிகண்டம் ஒன்றியம் பி.என். சத்திரம், சேதுராப்பட்டி, மருங்காபுரி ஒன்றியம் மணியக்குறிச்சி,
லால்குடி ஒன்றியம் கொப்பாவளி ஆகிய 4 கிராம ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
குறிப்பாக லால்குடி ஒன்றியம் கொப்பாவளி கிராம ஊராட்சித் தலைவராக, மதிமுக பிரமுகரான செல்வராணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இந்த ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இதில் 3 வார்டுகள் பெண்களுக்கும் 3 வார்டுகள் பொது என்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 6 வார்டுகளிலும் கல்பனா, மனோகரி, காயத்ரி, ஜெயலலிதா, கவிதா, சாந்தி என பெண்களே, போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
முதல் முறையாக கிராம ஊராட்சித் தலைவராகவும் வார்டு உறுப்பினர்களாகவும் முழுக்க முழுக்க பெண்களே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். போட்டியின்றி தேர்வாகியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை மதிமுக மகளிரணிச் செயலாளர் டாக்டர் ரொக்கையா மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.