இரண்டு மனைவிகளையும் ஊராட்சி மன்றத் தலைவராக்கியுள்ள முன்னாள் ஊராட்சித் தலைவர். 4 வாக்குகள் வித்தியாசத்தில் எம்எல்ஏவின் மகனையே தோற்கடித்த வேட்பாளர் என இந்த உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் கோவில் குப்பம், வழுர் அகரம் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு சுயேச்சையாக போட்டியிட்ட தனசேகரன் என்பவரது மனைவிகளான செல்வி , காஞ்சனா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். தனசேகரனும் ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார்.
விருதாச்சலம் ஒன்றாவது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து மறுஎண்ணிக்கை கோரி தேர்தல் அதிகாரிகளிடம் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஆனந்த கண்ணன் முறையிட்டார். மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆனந்த கண்ணன் 28 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அனிதா முருகவானி தோல்வியுற்றதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மயங்கி விழுந்தார். அதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
LIVE: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை நேரலையாக பார்க்க கிளிக்...
அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அங்கப்பன் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர். இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நடுக்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரனின் மகன் யுவராஜ் 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவர் 802 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அழகப்பன் 806 வாக்குகளும் பெற்றனர். அதனால் மறுதேர்தல் நடத்த கோரி யுவராஜ் தரப்பினர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நாகை அருகே 30 ஆண்டுகளாக ஒரே குடும்பத்திடம் இருந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மீண்டும் அதே குடும்பத்திற்கு சென்றுள்ளது.
கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் எம்பிஏ பட்டதாரி சிவராசு வென்றுள்ளார். அவரது தாத்தா, அப்பா உள்ளிட்டோர் அதே ஊராட்சியின் தலைவராக பணியாற்றியுள்ளனர். சிவராசுக்கு மலர்கிரீடம் சூட்டி அவரது ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினர்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், வடகரை ஊராட்சியில் 2 வாக்கு பெட்டிகளை காணவில்லை என புகார் எழுந்த நிலையில், வேறு அறையில் இருந்ததாக அதிகாரிகள் எடுத்து வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் உகாயனூர் ஊராட்சியியில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஊர்வலத்தில் மத்தளம் அடித்தபோது உற்சாக மிகுதியால் மாரடைப்பு ஏற்பட்டடு 21 வயதான அவரது மகன் கார்த்தி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே செ.நாச்சிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பொன்னி நல்லமுத்து தோல்வியை தழுவியதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தேன்மொழி வெங்கடேசன் வெற்றி பெற்றதாகவும் தவறுதலாக அறிவிக்கப்பட்டது. அதனால் பொன்னி நல்லமுத்து தரப்பினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2019