உள்ளாட்சித் தேர்தல்: நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

மாநில தேர்தல் ஆணையம்

அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

 • Share this:
  தமிழத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார். அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. முதல்கட்ட தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இலத்தூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களிலும்,  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட 3 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 4 ஊராட்சிகளிலும் அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை குடியாத்தம், காட்பாடி, பேர்ணாம்பட்டு உள்ளிட்ட 4 ஊராட்சிகளிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, திமிரி ஆகிய 3 ஊராட்சிகளிலும் அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி, சோலையார்பேட்டை உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை உட்பட 5 ஊராட்சி ஒன்றியங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர் உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்கள் என, முதல்கட்டத்தில் 39 ஊராட்சி ஒன்றியங்களில் அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  அக்டோபர் 9-ல் இரண்டாவது கட்டத் தேர்தலில் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் காணை, மேல்மலையனூர் உள்ளிட்ட 6 பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களிலும், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர் ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர்.

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர் உள்ளிட்ட 4 பகுதிகளிலும், திருப்பத்தூரில் ஆலங்காயம், மாதனூர் ஆகிய பகுதிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

  Must Read : தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு: இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது!

  தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
  Published by:Suresh V
  First published: