திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்பு மனுக்களை திருட முயற்சி நடந்துள்ளது.
இரண்டு கட்டமாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளை மாலையுடன் முடிவடைகிறது.
திருவாரூர் அருகே உள்ள வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வார்டு உறுப்பினர், தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நேற்று வரை 27 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி மன்ற அலுவலக பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அது குறித்து குடவாசல் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காவலர்கள் வந்து விசாரணை நடத்தியபோது, வாக்காளர் பட்டியல், காசோலை, அரசு முத்திரைகள் ஆகியவை குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்ட நிலையில் கிடந்தன. பீரோவும் உடைக்கப்பட்டிருந்து.
சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். வேட்பாளர்களின் மனுக்கள் திருடு போகவில்லை தேர்தல் நடத்தும் உதவி அலவலர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.