• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "பழைய மாவட்டங்கள் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல்" - அமைச்சர் பேச்சை ஏற்க மறுக்கும் திமுக

"பழைய மாவட்டங்கள் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல்" - அமைச்சர் பேச்சை ஏற்க மறுக்கும் திமுக

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

  • Share this:
பழைய மாவட்டங்கள் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். அமைச்சரின் பேச்சை அதிகாரப்பூர்வமானதாக ஏற்க முடியாது என திமுக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து தமிழகம் முழுவதும் நேற்றும், இன்றும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. திமுக சார்பில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய விருப்ப மனு விநியோகம், வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றும் விருப்பமனுக்களை பெற திமுகவினர் ஆர்வம் காட்டினர்.

தேமுதிகவில் நேற்று தொடங்கிய விருப்பமனு விநியோகம் வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். பாஜக சார்பில் இன்று மட்டும் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்த நடிகை கவுதமி தொண்டர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தும் நோக்கில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கு முன்பே புதிய மாவட்டங்ளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

2018-ல் ஏற்கனவே புதிதாக வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றும், புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விளக்கத்தை அதிகாரப்பூர்வமானதாக ஏற்க முடியாது என தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பல தடைகளுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், கடந்தமுறை போல் இல்லாமல் இந்த முறை தேர்தல் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: