உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றதாக நபர் ஒருவரின் சட்டையை கழற்றவைத்து அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்றதாக
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் எழுந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை ராயபுரத்தில் 49வது வார்டில் திமுக-வினர் சிலர் அத்துமீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி ஒருவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். ஜெயக்குமார் முன்னிலையிலேயே அவரை சிலர் தாக்க தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டும்படியும் கூறி ஜெயக்குமார் தடுத்தார். பின்னர், அந்த நபரிடம் சட்டையை கழட்டும்படி கடுமையாக ஜெயக்குமார் கூறினார்.
இதை தொடர்ந்து, அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு அவரது கைகளும் கட்டப்பட்டன. பின்னர், சட்டை இல்லாமல், அவர் அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ‘வேற வார்டை சேர்ந்த உனக்கு இங்கு என்ன வேலை என்றும், திமுகவைச் சேர்ந்த நீ எத்தனை கள்ள வாக்குகளை போட்டாய்’ என்றும் அவரிடம் ஜெயக்குமார் கேள்வி கேட்டார். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணி ஒருவர், அவரை சுட்டிக்காட்டி 25,30 பேர் மொத்தமாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நபர் ஒருவரை சட்டையை கழற்றவைத்து ஊர்வலமாக அழைத்து சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.