முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அ.தி.மு.கவினரின் பாதுகாப்புடன் வந்த தி.மு.க உறுப்பினர்; சுயேட்சையை வெற்றி பெறவைத்த ஆளும் கட்சி! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்

அ.தி.மு.கவினரின் பாதுகாப்புடன் வந்த தி.மு.க உறுப்பினர்; சுயேட்சையை வெற்றி பெறவைத்த ஆளும் கட்சி! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • Last Updated :

உறுப்பினர்கள் அணி மாறியது, தோடர் இனத்தின் முதல் ஊராட்சி தலைவர், மனைவி தலைவர், கணவர் துணைத் தலைவர் ஆகியது போன்ற பல சுவாரஸ்ய நிகழ்வுகள் உள்ளாட்சி மறைமுகத் தேர்தலில் நடைபெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த நாட்டுத்துரை தடுத்து நிறுத்தப்பட்டார். ஊராட்சித் தலைவர் செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன் தன்னை போட்டியிட விடாமல் தடுத்ததாக நாட்டுத்துரை குற்றம்சாட்டினார்.

கடலூர் மாவட்டத்தில் 2 அ.தி.மு.க பெண் உறுப்பினர்களுக்கு எழுதப் படிக்க தெரியாது என்பதால், மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட திருமாறன் என்பவர், அந்த பெண் வேட்பாளர்களின் கையில் பெயரை எழுதி அனுப்பினார்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் உமாராணிக்கு நேற்று குழந்தை பிறந்த நிலையில், மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க குழந்தையுடன் ஆம்புலன்ஸில் வந்து இறங்கினார்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் தி.மு.க சார்பில் தேர்தலில் வென்ற சந்திரமதி, அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக சந்திரமதியை, பலத்த பாதுகாப்புடன் அதிமுகவினர் வேனில் அழைத்து வந்தனர்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக அதிமுக சார்பில் சுயேட்சை வேட்பாளர் கவிதா வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லீலாவதி தோல்வியுற்றார்.

நீலகிரி மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த பொன்தோஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் தோடர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் ஒருவர் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வாகியிருப்பது இதுவே முதல் முறை. கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் வெளியாக காரணமாக இருந்தவர் பொன்தோஷ்.

உதகை ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றனர். இதனால் குலுக்கல் முறையில் குழந்தை ஒன்று எடுத்து கொடுத்த சீட்டின் அடிப்படையில், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவைச் சேர்ந்த உமா பிரியாவும், துணைத் தலைவராக அவரது கணவர் பாலச்சந்தரும் வெற்றி பெற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுகாநல்லூரில், தனது மனைவிக்கு வாக்களிக்கவில்லை எனக் கூறி விஜயகுமார் என்பவர், 9-வது வார்டு உறுப்பினர் முரளி என்பவரின் வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கினார்.

தேர்தல் அலுவலருக்கு உடல் நிலை சரியில்லாததால், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திமுக ஆதரவு உறுப்பினர்கள், வேன் ஒன்றில் பத்திரமாக வெளியூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Also see:

top videos

    First published:

    Tags: Local Body Election 2019