”மாமாவுக்கு ஓட்டு போடுங்க...” தேர்தல் பிரசாரத்தில் கலக்கிய பிரான்ஸ் மாணவி

”மாமாவுக்கு ஓட்டு போடுங்க...” தேர்தல் பிரசாரத்தில் கலக்கிய பிரான்ஸ் மாணவி
News18
  • Share this:
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் மேலராங்கியம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதுபாண்டி என்பவரை ஆதரித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் தீவிரமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்பு மனுதாக்கல் நடந்து வரும் வேளையில் இன்று மேலராங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதுபாண்டி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தார். அவருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Zoe Bellour என்ற பெண் 'Vote For mama (மாமாவுக்கு ஓட்டு போடுங்க)' என கோஷமிட்டபடியே வந்ததால் ஊர்வலத்தில் கலகலப்பு ஏற்பட்டது.
வேட்பாளர் மருதுபாண்டி கூறுகையில், “எனது மருமகனின் நண்பரான Zoe பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். தமிழகத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் தேர்தலை காண கிராமத்திற்கு வந்துள்ளார். இன்று வேட்பு மனு தாக்கல் என்பதால் என்னுடன் ஊர்வலமாக வந்தார்” என்றார்.

"பிரான்ஸ் நாட்டின் டாகுலஸ் நகரின் அருகில் பிலோகோஸ்டல் என்ற ஊரைச் சேர்ந்த நான் பள்ளி படிப்பை முடித்துள்ளேன். தமிழகத்திற்கு சுற்றுலா வந்த நான் தேர்தல் நடைபெறும் நிலையில், என்னுடைய நண்பரின் உறவினர் தேர்தலில் நிற்பதால் அதனை காண வந்துள்ளேன்” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “தமிழ் நாட்டின் கலாசாரம் ரொம்ப பிடித்துள்ளது. இங்குள்ள பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது எனக்கு பிடித்தால், நானும் வைத்து பார்த்தேன். ரொம்ப அழகாக தெரிந்தேன்.” என்றார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து Zoe இந்தியா வந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் தமிழகத்தில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். பள்ளிப் படிப்பு முடிந்து அடுத்து கல்லுரி செல்ல இன்னும் ஒரு வருடம் இருப்பதால் உலகை சுற்ற வந்துள்ள நிலையில் தமிழகத்தில் வலம் வந்து கொண்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் இன்று பலரும் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் வேளையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணும் ஊர்வலமாக வந்தது வேட்பு மனுதாக்கலை கலகலப்பூட்டியது.

Also See...
First published: December 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்