தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
முதல்கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவானது. இந்த தேர்தலில் 2 லட்சத்து 31 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் மேஜைகளுக்கு கொண்டு வரப்படும். அங்கு வைத்து வாக்குச் சீட்டுகள் பிரிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முன்னணி நிலவரம் பிற்பகலுக்கு பிறகும் இறுதி முடிவு மாலையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.