ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஊரக உள்ளாட்சித்தேர்தல் - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் ஓய்ந்தது

ஊரக உள்ளாட்சித்தேர்தல் - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் ஓய்ந்தது

தேனியில் ஓ.பி ரவீந்திர நாத் பிரசாரம்

தேனியில் ஓ.பி ரவீந்திர நாத் பிரசாரம்

  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் 2-வது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக, கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கவுந்தப்பாடி மற்றும் ஐயம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில், எந்த சிறுபான்மையினரும் கலந்துகொள்வதில்லை என்றும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் உதவி செய்பவர்கள் மட்டுமே கலந்துகொள்வதாகவும் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், இந்திரா நகர் பகுதியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பரப்புரை மேற்கொண்டார்.

கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் அதிமுக-விற்கு இல்லை என்று விளக்கம் அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீலகிரி, மேலவெளி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்எல்ஏ நீலமேகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரித்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை ஆகிய பகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். பிள்ளபாளையம் பகுதியில் அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் ஆள்உயர ரோஜா மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் தென்னரசு, தனது சின்னமான மண் வெட்டியை கையில் வைத்துக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம், அறந்தாங்கி உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரப்புரை மேற்கொண்டார். வடகாடு அருகே அரை கிலோமீட்டர் தொலைவுக்கு பெண்கள் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி குழு அதிமுக வேட்பாளர் வள்ளியம்மை, சேந்தமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூபாலன் ஆகியோர் வாக்காளர்களை பார்த்து காலில் விழுவது போன்று கைகூப்பி வாக்கு சேகரித்தனர். இவர்களின் பரப்புரையின் போது கூடியிருந்த சிறுவர்கள் இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.

கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடிகை கௌதமி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் உங்களது வாக்கு வீணாகிவிடும் என்று தெரிவித்தார்.

இதே போன்று நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்கள் தங்களது பரப்புரையை நிறைவு செய்தனர்.

First published:

Tags: Local Body Election 2019