உள்ளாட்சி பதவிக்கு ஏலம் எடுத்து வேட்புமனு தாக்கல் செய்து இருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என்று கடலூர் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் வருகிற 29 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் இன்று வரை 12236 பேர் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் தலைமையில் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பணி குறித்து பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில்,”கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு கிராம மக்களே ஏலம் எடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் யாரும் ஏலத்தில் பங்கேற்க வில்லை. தன்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என கிராம மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தயங்காது” என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.