உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் 50 சதவீத பெண்களைக் கொண்டு நிரப்ப வேட்பாளர்கள் கிடைக்காமல் கட்சிகள் தடுமாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 30 ஆயிரங்கள் பதவி இடங்கள் அதிகரித்துள்ளன. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 785 இடங்களில், 70 ஆயிரம் இடங்களுக்கு மேல் பெண்கள் போட்டியிட உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பிரதானமாக இயங்கி வரும் பெரும்பாலான கட்சிகளில் 50 சதவீத பெண்களைக் கொண்டு நிரப்ப வேட்பாளர்கள் கிடைக்காமல் மிகவும் தடுமாறி வருவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளிலும் மகளிர் அணி என்று தனியாக ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதானமாக இருக்கும் அதிமுக, திமுக வில் கூட பெண் வேட்பாளர்கள் கிடைக்காமல், ஆண் நிர்வாகிகளின் மனைவி, சகோதரி, தாய் என உறவினர்களாக பார்த்து அரசியல் அனுபவமே இல்லாத பெண்களை களமிறக்க தயாராகி வருகின்றன.
சமூக நீதி, பெண்ணுரிமை பேசக்கூடிய தமிழகத்தில் இத்தகைய நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ள சமூக செயற்பாட்டாளர் ஓவியா, பெண்களுக்கான இட ஒதுக்கீடை சட்டபூர்வமாக ஆக்குவதன் மூலமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தான் 50 சதவீதம் நிரப்பப்படுகிறது என கூறியுள்ளார்.
பெண்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நிலை முதலில் அரசியல் கட்சிகளின் தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் ஏற்படவேண்டும், அப்போதுதான் பெண்கள் முன்னேற முடியும் என தெரிவிக்கிறார் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சரும், திமுக இலக்கிய அணி செயலாளருமான புலவர் இந்திராகுமாரி.
மேலும், பெண்கள் சுயமாக வேலை பார்ப்பதற்கு எல்லா கட்சிகளும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
இன்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக பெண்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறியுள்ளார். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும் போது தான் உண்மையான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
80 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டமே பெண்களால் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்றைய காலகட்டத்தில் அரசியலில் பெண்களின் மிகக் குறைவாக இருப்பதற்கு அரசியல் கட்சிகளும், இந்த சமூகமுமே பொறுப்பேற்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.