சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கவயல் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவோரிடம் கணக்கு கேட்போம் என கிராம மக்கள் துண்டு பிரசுரம் கொடுத்து எச்சரித்து வருகின்றனர்.
காரைக்குடி அருகே சாக்கவயல் ஊராட்சியில் சுட்டிநல்லிப்பட்டி, தச்சபிலான்பட்டி, பெரியகாட்டுகுறிச்சி, சாக்கவயல், அடம்பன்குடி, சின்னகாட்டுகுறிச்சி, குளப்படி, மேலமணக்குடி, நாச்சியார் மண்டபம், மலையந்தாவு உள்ளிட்ட கிராமங்களில் 2000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஊராட்சித் தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம், ‘ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சி நிதியில் எடுத்துவிடலாம் என நினைக்க வேண்டாம். கிராசபை கூட்டத்தில் கணக்கு கேட்போம். நீங்கள் கொடுக்கும் தகவல் சரிதானா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சரிபார்ப்போம். ஊழல் நடைபெற்றது உறுதியானால் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம். ஊடகம், முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்புவோம்,’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை எச்சரிக்கும் வகையில் கிராமமக்கள் கொடுத்து வருகின்றனர்.
இதனால் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவுகளையும் வேட்பாளர்கள் குறைத்துள்ளனர்.
இதேபோல் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பூர் ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை அன்போடு எச்சரித்து தெருத்தெருவாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
அந்த சுவரொட்டியில், ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு வென்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து எடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு யாரும் பதவிக்கு வர வேண்டாம்.
கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வரவு செலவு கணக்கு கேட்டு அறியப்படும். கேட்டு அறியப்பட்ட தகவல்கள் சரியானதா என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் பெயர் பதவி விவரம் ஆகியவை அவரது புகைப்படத்தோடு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கம்பூர் ஊராட்சி இளைஞர்களால் பகிரப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகள் கம்பூர் ஊராட்சியின் அனைத்து தெருக்களிலும் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2019