சின்னம் மாற்றி அச்சடிப்பு, வாக்குச் சீட்டில் சின்னமே இல்லை, சின்னம் இருந்தால் பெயர் இல்ல... என இன்று நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய குளறுபடிகளும், சுவாரஸ்ய நிகழ்வுகளும் ஏராளம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தனக்கான சின்னம் மாறியுள்ளதாக கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியது. உடனடியாக விசாரணை நடத்தப்பட்டதில் சேகர் என்ற அந்த வேட்பாளருக்கு 'ஸ்குரூ' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ஆனால் அதை புரிந்துகொள்ளாத வேட்பாளர் இத்தனை நாட்கள் 'ஸ்பேனர்' சின்னத்திற்கு வாக்குசேரித்து வந்ததாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்திய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, சேகருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஸ்பேனர்தான் என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தால் தவறுதலாக சின்னம் மாற்றி அச்சிடப்பட்டிருப்பதாக விளக்கமளித்தார். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு உறுதியளித்தார்.
அரசு கொடுத்த பட்டா நிலத்தில் தாங்கள் வீடுகட்ட வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.
நாகை மாவட்டம் தெத்தியில் வாக்குச்சாவடி உள்ளேயே அதிமுகவினர் வாக்கு சேகரிப்பதாகக் கூறி, மாற்றுக் கட்சியின் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாறி, மோதல் மூண்டதால், வாக்குச்சாவடியை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்குள் இருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
இதேபோல் அக்கரைப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி அருகே ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சிவிளைவில் தலித் சமுதாயத்திற்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால் மாற்ற சமுதாயத்தினர் தேர்தலை புறக்கணித்தனர். இந்தப் பகுதியில் 4 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 6 ஓட்டுகள் மட்டுமே பதிவானது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசின் உத்தரவையும் மீறி ஆக்ஸ்ஃபோர்டு என்ற தனியார் பள்ளி இன்று செயல்பட்டது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டதுடன், அங்கிருந்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
சேலம் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட பூலாவரி கிராமத்தில் சின்னபிள்ளை என்ற 100 வயதை கடந்த மூதாட்டி தடி ஊன்றியவாறு வந்து அதிகாலையிலேயே ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.