பல்லி இறந்துகிடந்த மாஸா குளிர்பானத்தைக் குடித்த சிறுமி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை பால்நாகுப்பம் பகுதியில் வசித்து வருபவர் பரத்குமார். இவரது மகள் டித்தா (10).
பரத்குமார் தனது வீட்டுக்கு வந்த உறவினர்களை சென்னைக்கு வழியனுப்பவதற்காக திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அவருடன் அவரது மகள் டித்தாவும் வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் உள்ள குளிர்பான கடை ஒன்றில் தனது மகள் டித்தாவுக்கு டப்பாவில் அடைக்கப்பட்டுள்ள மாஸா குளிர்பானத்தை வாங்கிக் கொடுத்துள்ளார் பரத்குமார்.
அந்தக் குளிர்பானத்தைக் குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பரத்குமார் சிறுமி குடித்த மாசாவைப் பார்த்தபோது அதில் பல்லி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மயக்கமடைந்த சிறுமியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாஸா குளிர்பான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், “தரமற்ற வெளிநாட்டு குளிர்பானத்தை பொதுமக்கள் வாங்கி குடிக்கின்றனர். குளிர்பானம் காலாவதியானதை பொதுமக்கள் கவனிப்பதில்லை. இதுபோல் பலமுறை நடந்துள்ளது. உணவு பரிசோதிக்கும் அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்” என்கிறார்.
வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் நடிக்க தமிழ் கலாசாரத்தை கற்பது முக்கியம்: தமன்னா
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.