HOME»NEWS»TAMIL-NADU»little girl child dies in garbage dump thiruppur police suspicion on her mother crime video vai
குப்பை கிடங்கில் கிடந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: தாய் மீது சந்தேகம்? (வீடியோ)
திருப்பூர் மாவட்டத்தில், 8 வயது சிறுமியை குப்பையில் தாய் வீசிய வழக்கில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்டது சளிமருந்தா அல்லது விஷமா? போலீசார் விசாரணையில் தெரியவந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன் பாளையத்தில் குப்பைக் கிடங்கு மையம் உள்ளது. அங்கு டிசம்பர் 25ம் தேதி 8 வயது சிறுமி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அருகில் கிடந்த பையை பரிசோதித்தபோது, பொம்மைகளும், அவற்றை பெங்களூருவில் வாங்கியதற்கான ரசீதுகளும் இருந்தன. பொதுமக்கள் மூலம் சிறுமி, முதலில் அவிநாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரணையில் சம்பவ இடத்தின் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு பெண் சிறுமியை விட்டு விட்டுத் தனியாக சென்றது பதிவாகியிருந்தது.
அதேநாள் இரவில், தண்டுக்காரன்பாளையத்தில் அந்தப் பெண் பொதுமக்களிடம் பிடிபட்டார். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் பெயர் சைலஜா குமாரி என்பதும் அவர் ஒரு மருத்துவர் என்பதும் தெரியவந்தது. அவரது கணவர் பெயர் முத்துசாமி என்பதும் சொந்த ஊர் தஞ்சாவூர் என்பதும் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
அதேநேரம் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்ததால் சைலஜா அவருக்கு விஷம் கொடுத்தாரா எனக் கேட்டபோது மகளுக்கு கொடுக்கவில்லை என்றும் தான் சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து சைலஜாவை அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்தச் சூழலில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறும திங்கள் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூறாய்வுக்குப் பிறகே குழந்தைக்கு தாய் கொடுத்தது சளி மருந்தா அல்லது விஷமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாய் சைலஜா குமாரி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.