தமிழ் திரையுலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கலை, இலக்கியம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு 12 ராஜ்ய சபா இடங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அவர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பார். அந்த வகையில் கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்கள் ஒரு பார்வை
ஸ்ரீ அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (1952-1953)
இந்திய அரசியல் சாசன சபையின் உறுப்பினர். இவர் சென்னை மாகாணத்தின் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார். இவருடைய சிறப்பான பணிகளுக்காக அவர் 1952-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ருக்மிணி தேவி அருண்டேல் (1952 - 1962)
மதுரையில் பிறந்த ருக்மிணி இந்திய வரலாற்றில் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர்தான். இவர் ஒரு பரதநாட்டிய நடனக்கலைஞர். அவர் ஒரு விலங்கு நல ஆர்வலராகவ்ம் இருந்தார்.
ஜகதீசன் மோகன் குமாரப்பா (1952-1957)
இவர் ஒரு காந்தியவாதி. பொருளாதார அறிஞர். சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக வேண்டும் எனக் காந்தி இவரை வலியுறுத்தினார். நேருவின் திட்டங்கள் மேல் மாற்றுக்கருத்து இருந்ததால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
ஆனால் அறிஞர் என்ற முறையில் இவருக்கு 1952-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமிக்கப்பட்டது.
விடி கிருஷ்ணமாச்சாரி (1961-64)
இவர் பிரிட்டிஷ் ஆட்சியில் பரோடா அரசின் திவானாக இருந்தார். பின்பு ஜெய்பூர் அரசின் பிரதம மந்திரியாகவும் இருந்தார். சுதந்திரத்திற்குப் பின் 1961-ம் ஆண்டு ராஜ்ய சபாவிற்கு நியமிக்கப்பட்டார்.
ஜி ராமச்சந்திரன் (1964 - 1970)
ராமச்சந்திரன் அடிப்படையில் ஒரு ஆசிரியர், காந்தியவாதி மற்றும் சமூக செயற்பாட்டாளர். இவரது மனைவி டிஎஸ் சவுந்தரம், டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர் டிவி சுந்தரம் ஐயங்காரின் மகள். இவருக்கு 1964ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமிக்கப்பட்டது.
மரகதம் சந்திரசேகர் (1970 - 1984)
மரகதம் சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவருக்காகப் பிரச்சாரம் செய்ய வந்தபோதே ஸ்ரீபெரம்பதூரில் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இவருடைய சமூக சேவைகளுக்காக இவருக்கு 1970-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமிக்கப்பட்டது.
சிவாஜி கணேசன் (1982- 1986)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர். இந்திய சினிமாவில் தோன்றிய தலைசிறந்த நடிகர்கள் வெகு சிலரில் ஒருவர். கலைக்கான இவருடைய பங்களிப்பிற்காக 1982-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமிக்கப்பட்டது.
திண்டிவனம் கே ராமமூர்த்தி (1984 - 1990)
இவர் அடிப்படையில் ஒரு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் தமிழக சட்டசபை உறுப்பினராக இரு முறை பதவி வகித்துள்ளார். 1981 முதல் 1984 வரை தமிழகச் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். இவருக்கு சமூக சேவைக்காக 1984-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமிக்கப்பட்டது.
வைஜெயந்தி மாலா (1993 - 1999)
தமிழகத்தில் பிறந்த வைஜெயந்தி மாலா 1950களில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர். கலைக்கான இவருடைய பங்களிப்பிற்காக 1993-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமிக்கப்பட்டது.
சோ ராமசுவாமி (1999 - 2005)
சோ ராமசுவாமி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர் மற்றும் சினிமா நடிகர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர். துக்ளக் இதழைத் தொடங்கியவர். 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு ராஜ்ய சபா எம்பியாக இருந்தார்.
எம் எஸ் சுவாமிநாதன்(2007-2013)
எம் எஸ் சுவாமிநாதன் ஒரு விஞ்ஞானி. உலக அளவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர். பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர். அவருடைய இந்த சிறப்பான பங்களிப்பிற்காக 2007-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமிக்கப்பட்டது.
சி ரங்கராஜன் (2009 - 2014)
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர். பொருளாதார அறிஞர். ஐஐஎம், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் பேராசிரியராக பணிபுரிந்தார். பொருளாதாரத்தில் இவருடைய பங்களிப்பிற்கு 2009-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார்.
ஹேம மாலினி (2014- 2020)
தமிழகத்தில் பிறந்த ஹேம மாலினி பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கியவர். இவர் முதலில் இது சத்தியம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் கலைக்கு அளித்த பங்களிப்பிற்காக 2014-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
சுப்பிரமணிய சுவாமி (2016-2022)
சுப்பிரமணிய சுவாமி ஒரு பொருளாதார அறிஞர், அரசியல்வாதி மற்றும் பேராசிரியர். ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றியவர். இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்தவர். 2016-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினருக்கு நியமிக்கப்பட்டார்.
தற்போது இவர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ilayaraja, Rajya Sabha