Home /News /tamil-nadu /

இப்போதுதான் குடும்பத்தில் நிம்மதி இருக்கிறது... மதுபானக் கடைகளைத் திறக்காதீங்க... குடிமகன்கள் கோரிக்கை

இப்போதுதான் குடும்பத்தில் நிம்மதி இருக்கிறது... மதுபானக் கடைகளைத் திறக்காதீங்க... குடிமகன்கள் கோரிக்கை

கோப்பு படம்

கோப்பு படம்

டாஸ்மாக் கடையை திறக்காதீங்க. குடிய விட்டு நாலு மாசமாச்சு, இப்பதான் வாழ்க்கை நல்லா இருக்கு,  இனிமே தொறந்தா திருப்பியும் குடிக்க ஆரம்பிச்சிருவோம் என்கின்றனர் குடிமகன்கள்.

சென்னையில் நான்கு மாதங்களாக மூடி இருக்கும் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்காமல் இருந்தால் நல்லது என்கிறார்கள் தினந்தோறும் குடித்து வந்த குடிமகன்கள். இவர்களின் மனநிலையும் உடல் நிலையும் இப்போது எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் வாயிலாகவே கேட்கலாம்.

கொளுத்தும் வெயிலில் வேலை செய்பவர்கள் முதல் குளுகுளு அறையில் வேலை செய்யும் நபர்கள் வரையிலும் பலருக்கும் தினமும் குடித்தே தீர வேண்டும் என்பது பழக்கமும், வழக்கமுமாய் மாறிவிட்டது. சென்னையை பொருத்தமட்டில் ஊரடங்கு தொடங்கிய காலம் முதல் இப்போதுவரையிலும் நான்கு மாதங்களாக டாஸ்மாக் கடைகள் இல்லை.

Also read... வீட்டை காலி செய்ய கூறியதால் குழந்தைகளுடன தற்கொலை செய்து கொண்ட தாய் - சிவகங்கையில் சோகம்

இதனால் தினம்தோறும் மது அருந்தி வந்தவர்கள் ஆரம்பக்கட்டத்தில் அங்குமிங்கும் அலை மோதினார்கள். பக்கத்து மாவட்டத்திற்கு சென்று வாங்குவது கள்ளச் சந்தையில் வாங்கி குடிப்பதுமாக இருந்தது.

நாளடைவில் வேலை வாய்ப்பில்லாமல் வருமானம் இல்லாததால் குடிப்பதற்கு செலவு செய்ய வாய்ப்பில்லாமல் போனது. இதனால் தற்போது குடியை முழுதும் மறந்து விட்டதாக கூறுகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த காத்தவராயன்.

குடிக்காமல் இருப்பதால் அதிக அளவில் உணவு சாப்பிட  முடிவதாகவும் உடல் நலமாக இருப்பதாகவும் கூறுகின்றனர் சிலர். முதலில் குடிக்காமல் இருந்தபோதும் சற்று சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது பழகிப் போனது. இதனால் மீண்டும் கடைகளைத் திறக்க வேண்டாம் என்கிறார் வியாசர்பாடியைச் சேர்ந்த சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி.

டாஸ்மாக் கடைகள் இல்லாததால் வருமானத்தில் பெரும் பகுதியை தற்போது வீட்டுக்கு கொடுப்பதாகவும் வீட்டில் உள்ளவர்கள் முன்பைவிட சந்தோஷமாக இருப்பதாகவும் கூறுகின்றனர் கூலி வேலை செய்யும் அப்பாவிகள்.

தினசரி குடித்து வந்தவர்களுக்கு 4 மாதம் கடந்து விட்டது. இப்போது குடிப்பது முக்கியமானதாக தெரியவில்லை என்கிறாார் ரிக்‌ஷா ஓட்டும் ஜோசப்.

ஆனால் அரசாங்கம் டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் மீண்டும் குடிக்கத்தான் தோன்றும், எனவே கடையே வேண்டாம் என்பது குடிமகன்களின் தெளிந்த மனநிலையாகவும், தெளிவான குரலாகவும் ஓங்கி ஒலிக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி