சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (66). குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுத் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் தனது மனைவியிடம் சாப்பிடுவதற்கு தோசை சுட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது மனைவி வத்சலா வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். குடிப்பதற்குப் பணமும் கொடுக்க மறுக்கிறார், சாப்பிட உணவும் தர மறுக்கிறார் என ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
Also read: ரஜினி கட்சி தொடங்கினால், மு.க ஸ்டாலின் போராட வேண்டியிருக்கும்.. - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து
அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், இன்று பரிதாபமாக இறந்துபோனார். இந்தச் சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050