வாழ்க்கை என்பது பள்ளிக்கூடம், அதில் அனைவரும் மாணவர்கள் தான், எனவே நானும் மாணவன் தான் என பள்ளி ஆண்டு விழா ஒன்றில் பங்கேற்ற முதல்வர்
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் மேல்நிலைப்பள்ளியில் 30ஆம் ஆண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலே தமிழ்நாடு முதல் இடம் என்ற பெயர் வர வேண்டும் என உழைத்து கொண்டு இருக்கிறோம். நான் முதல்வராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், எப்போதும் உங்கள் அன்பை பெற்ற, உங்களில் ஒருவனாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி.
உலகில் எங்கு சென்றாலும், கொளத்தூர் வரும் போது எனக்கு தனி ஈர்ப்பு, அதிலும் குழந்தைகளை காணும் போது தனி மகிழ்ச்சி. வாழ்க்கை என்பது பள்ளிக்கூடம், அதில் அனைவரும் மாணவர்கள் தான், எனவே நானும் மாணவன் தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் ஆகியோரின் திராவிட பள்ளியில் பயின்ற, பயிலக்கூடிய மாணவன் நான்.
30 வருடமாக பெண் ஆசிரியர்கள் கொண்டு மட்டுமே இந்த பள்ளி இயங்கி கொண்டு வருகிறது பாராட்டுக்குரியது. அனைத்து பள்ளிகளிலும் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும் அத்தகைய ஆட்சிதான், நான் அடிக்கடி சொல்லும் திராவிட மாடல் ஆட்சி.
ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
மாணவர்கள் ஜாதி, மத பேதமின்றி, வெறுப்பு உணர்வின்றி நட்பை பள்ளி பருவத்துடன் விட்டுவிடாமல், தொடர்ந்தால் தான், நமக்கும், நாட்டுக்கும் நல்லது. உங்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் அடித்தளம் இடுவது பள்ளி பருவம் தான். பள்ளிகளில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்களின் இன்னொரு பெற்றோராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, பள்ளிக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.