மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள யூனியன் கிளப்பில் மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமரஸ் சார்பில் உணவுப் பாதுகாப்புத் துறை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பேசிய உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ், உணவுகளை இலவசமாக வழங்கவும் உரிமம் அவசியம் என்று தெரிவித்தார்.
மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமரஸ் சார்பில் உணவுப் பாதுகாப்புத் துறை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், நுகர்வோர்க்கு தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த 2011-இல் உணவுப் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி மயிலாடுதுறை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை தர நிர்ணய, பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. உணவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், தேனீரகங்கள், திருமணக்கூடங்கள், பள்ளி உணவகங்கள், குடிநீர் வாகனங்கள், அன்னதானம் வழங்கும் வழிபாட்டுத் தலங்கள் என விற்பனைக்காகவோ, இலவசமாகவோ உணவுப் பொருள்களை வழங்க அனைவரும் அந்தந்தப் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட நியமன அலுவலரிடம் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
உரிமம் இல்லாமல் இருந்தாலோ, புதுப்பிக்கப்படாமல் இருந்தாலோ ரூ.5000 அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பாக்கெட்டுகளில் உணவின் பெயர், தயாரிப்பாளரின் முகவரி, உட்பொருள்கள், சத்துக்கள் விபரம், சைவ, அசைவ உணவுக்குறியீடு, தயாரிப்பு, காலாவதி தேதி ஆகியன அச்சிடப்பட வேண்டும். அச்சிடப்படாமலோ அல்லது அழிக்கப்பட்டு இருந்தாலோ உணவுப் பாதுகாப்புத்துறைக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இத்தகைய தகவல் அச்சிடப்படாமல் இருந்தால் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, நிறுவனம், கடைக்கு சீல் வைக்கப்படும். பாட்டில் குடிநீர் வாங்கும்போது ஐஎஸ்ஐ, எப்எஸ்எஸ்ஏஐ எண் அச்சிட்டுள்ள அடைக்கப்பட்ட பாட்டில், கேன் குடிநீரை மட்டுமே வாங்க வேண்டும். பழைய உணவு, பழைய, கெட்ட இறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும்.
தோற்ற பொலிவுக்காக உணவு பதார்த்தங்களில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவான 100 பி.பி.எம்-க்கு அதிகமாகும்போது அது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

உணவுப் பாதுகாப்புத்துறை விழிப்புணர்வு முகாம்
வணிகர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.தமிழ்ச்செல்வன், சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் செல்வம், முன்னாள் தலைவர் சி.செந்தில்வேல், செயலாளர் புலவர் செல்வம், பொருளாளர் மோகன்ராஜ், முன்னாள் செயலாளர் சுரேஷ், மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத் தலைவர் சிவலிங்கம், சிறுமளிகை சங்க செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Must Read : சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை.. 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்பு - நடந்தது என்ன?
கூட்டத்தின் முடிவில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
செய்தியாளர் - கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.