தனிமனித இடைவெளியுடன் மது குடிப்போம்... டாஸ்மாக் கடை முன்பு உறுதிமொழி எடுத்த மதுப்பிரியர்கள்...

மதுபானக் கடை

கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

  • Share this:
    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதில் வகை 2 மற்றும் 3-ல் உள்ள 27 மாவட்டங்களில் கடந்த மாதமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தடுப்புகள் அமைத்து தனிமனித இடைவெளியை பின்பற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டாஸ்மாக் திறக்கப்பட்டதும் உற்சாகமடைந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு கற்பூரம் காட்டியும், தேங்காய் உடைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை ஆலாந்துறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து மது குடிப்போம் என சிலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உக்கடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த மதுப் பிரியர்கள் சிலர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திருப்பூரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை இனிப்புகள் வழங்கி மதுபிரியர் ஒருவர் கொண்டாடினார். வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தினர்.

    சேலம் மாவட்டம், நங்கவள்ளி அடுத்த வீரக்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த நபர், தேங்காய், பழம், ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்னர் மது வாங்கிச்சென்றார்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, மதுபாட்டில்களை திருடி சென்றவரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். வடுகப்பட்டியில் உள்ள அந்த கடைக்குள், தலைக்கவசம் அணிந்து கொண்டு நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த சிசிடிவி கேமராவை வேறுபக்கம் திருப்பி வைத்து ஒரு டின் பீரை குடித்து விட்டு, 4 விலையுயர்ந்த மதுபாட்டில்களை மட்டும் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுப்பிரியர் ஒருவர் அதீத போதையில், சாலையில் தவழ்ந்து சென்று பேருந்தில் ஏறினார். காந்திபுரம் பகுதியில் மதுகுடித்த ஒருவர், தன்னிலை மறந்து சாலையில் மயங்கி விழுந்தார். மீண்டும் எழ முடியாத நிலையில், பேருந்து நிலையத்தில் தவழ்ந்தவாறே சென்று பேருந்தில் ஏறினார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... மேட்டூர் அணையின் நீர் இருப்பு குறைந்தது..


    மதுரையில் மதுபாட்டிலுக்குள் காகிதம் இருந்ததால், மதுகுடிப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சத்திரப்பட்டி பகுதியிலிருக்கும் டாஸ்மாக்கிலிருந்து வாங்கப்பட்ட மதுபாட்டிலில், காகிதம் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மதுகுடிப்போர், அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால், தங்களுக்கு எந்தவித முறையான தகவலும் அளிக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published: