அதிமுக பொதுக்குழுவில், திமுகவை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த கேள்விக்கு, அதிமுகவுக்கு தைரியம் இருந்தால் வழக்கு போடட்டும். நாங்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“முதல்வர் பழனிச்சாமி திமுக மீதும், தலைவர் மீதும் பல குற்றச்சாட்டுகளை கூறுகிறார். விவாதத்துக்கும் அழைத்துள்ளார். நான் முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், யாரும் இதற்கு பதில் அளிக்கவில்லை.
சர்க்காரியா கமிஷன், 2 ஜி வழக்கு என எதுவும் நிரூபிக்கப்படவில்லை. உள் நோக்கத்துடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முதல்வர் பேசுகிறார். ஊழல் செய்தவர் என்று ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவர். இது அனைவருக்கும் தெரியும். எங்கள் மீது ஆதாரம் இல்லாமல் எப்படி பேச முடியும் ?
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, காமராஜ் என பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் இருக்கிறது. விசாரணை செய்த விவரங்களை கொடுக்க மறுக்கின்றனர். அதிமுகவின் ஊழல் புகார் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.
ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதா படம் இன்னும் பயன்படுத்துகின்றனர். நான் யாருடன் விவாதிக்கவும் தயார். ஆனால் அதிமுகவில் யாரும் பதில் அளிப்பதில்லை.
உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து பேசியதாக வெளியாகும் சர்ச்சை குறித்த கேள்விக்கு, சமூக வலைதளத்தில் திரித்து பேசுகின்றனர் என்றார்.
அதிமுக பொதுக்குழுவில், திமுகவை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த கேள்விக்கு, அதிமுக தைரியம் இருந்தால் வழக்கு போடட்டும். நாங்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம், என்றார்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது பொள்ளாச்சி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மற்றும் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்பு இருக்கிறது. இதில் முறையான விசாரணை, நீதிமன்றத்தின் தலையீடு சரியாக இருக்கும்.
திமுக நடத்தும் கிராமசபை கூட்டத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி எனவும் ஆ.ராசா தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.