பெட்ரோல் - டீசல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்திட, கொரோனா நிவாரண நிதியாக ரூ. 7,500 வழங்கிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஜூன் 28-30 தேதிகளில் தமிழகம் முழுவதும் எதிர்ப்பியக்கம் நடத்தப்படும் இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
இது குறித்து, சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்)லிபரேசன் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், தொல். திருமாவளவன் எம்.பி, என்.கே. நடராஜன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “அத்தியாவசியப் பொருள்களின் தொடர் விலை உயர்வுகள் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி அரசு தொடர்ச்சியாக பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த 40 நாட்களில் மட்டும் 21 முறை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100/-ஐ தாண்டியுள்ளது. டீசல் விலை லிட்டர் ரூ. 100/.ஐ தொடும் நிலை உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர்.
மோடி அரசின் நாசகர கொள்கையினால் இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து மந்தநிலைக்குச் சென்றுள்ளது. அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வேலையிழப்புகளும், வருமானமின்மையும் அதிகரித்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. மோடி அரசு இதனை தடுப்பதற்கு மாறாக வேடிக்கைப் பார்க்கிறது. இந்நிலையில் பெட்ரோல் – டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்கக் கோரியும், அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ. 7500/- மற்றும் உணவுப் பொருட்கள் 6 மாத காலத்திற்கு வழங்க கோரியும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறைகூவலுக்கேற்ப தமிழகத்தில், வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் - டீசல் விலை உயர்வுகளை திரும்பபெறுக. இதன் மீதான கலால் வரிகளை உடனடியாக குறைத்திடுக.
உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுத்து தங்குதடையின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திடுக. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுகளை கட்டுப்படுத்திடுக.
கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் ரூ. 7,500/- வழங்கிடுக.
மத்திய தொகுப்பிலிருந்து நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் மற்றும் அவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கிடுக.
தடுப்பூசி இலவசமாக செலுத்துவதற்கு தங்குதடையின்றி மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வதோடு, செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோ டெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு தமிழக அரசிற்கு அனுமதி வழங்கிடுக.
Must Read : ஒரே நாளில் 164.87 கோடி ரூபாய்க்கு மது விற்பனை - சென்னையை முந்திய மதுரை
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 2021 ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மத்திய அரசை வலியுறுத்திய இயக்கங்களை நடத்துவது என சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வியக்கம் கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும்.
இவ்வியக்கத்திற்கு தமிழக மக்கள் பேராதரவு தந்து வெற்றிபெறச் செய்வதுடன், மத்திய மோடி அரசின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக கண்டனக் குரலெழுப்பிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CPI, CPM, Petrol Diesel Price hike, Viduthalai Chiruthaigal Katchi