உள்ளாட்சியில் தொடங்கி தமிழக அரசியலில் உச்சம் பெற்றத் தலைவர்கள்!

உள்ளாட்சியில் தொடங்கி தமிழக அரசியலில் உச்சம் பெற்றத் தலைவர்கள்!
தலைவர்கள்
  • News18
  • Last Updated: November 21, 2019, 5:47 PM IST
  • Share this:
தமிழகத்தின் முதலமைச்சர்களில் 3 பேர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பின்னாளில் தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். இதேபோன்று இன்னும் எத்தனையோ பேர் உள்ளாட்சி அமைப்புகளில் முத்திரை பதித்த பின்னர் தான் அரசியல்வாதியாக அறிமுகமாகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது. அரசியல் வாழ்வில் பெரும் தலைவர்களாக வந்தவர்களில் பலரது ஆரம்பப் பள்ளிக்கூடம் என்பது உள்ளாட்சித் தேர்தல்தான் என்றால் மிகையல்ல.

வார்டு கவுன்சிலர் தொடங்கி, மாநகராட்சி மேயர் வரையிலும் இருக்கும் பல பதவிகளில் பாடம் கற்றவர்கள் தான் பின்னாளில் அரசியல் உலகில் கொடிகட்டி பறக்கிறார்கள். இப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பரிணமித்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அதிலிருந்து சிலரை மட்டும் பார்க்கலாம்.


தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜியின் அரசியல் பயணம் உள்ளாட்சியில் இருந்தே உருவெடுத்துள்ளது. 1917-ஆம் ஆண்டு சேலம் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது சம்பளமே வாங்காமல் அவர் வேலை பார்த்தார் என்பது கூடுதல் சிறப்பு.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர் 1937-ல் கவுன்சிலராக வெற்றி பெறுகிறார். 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர மன்றத் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். பின்னாளில் அரசியலில் அவர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கிறார்.

1917-ல் ஈ.வெ.ராமசாமி பெரியார் ஈரோடு நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். குடிநீருக்காக மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு வீதியில் அலையக் கூடாது என்பதற்காக வீட்டுக்கு ஒரு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதன்முதலில் தந்தவர் பெரியார் தான். 1919-ல் அந்தப் பதவி வேண்டாமென்று விலகினார்.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 1996-ம் ஆண்டு தேனி நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அதிலிருந்து கிடைத்த அனுபவமும், ஆளுமையும் 2001-ல் அவருக்கு வருவாய்த் துறை அமைச்சர் என்ற புதிய பதவியைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் அரசியலில் உச்சம் தொட வைத்தது.

தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பொருத்தவரையில் 1996-ல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2001-ல் மேயராக பதவியேற்றாலும் அடுத்த ஆண்டிலேயே பதவியை இழந்தார். இதில் கிடைத்த அனுபவமே அவருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற புதிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பொருத்தவரை அவரது ஆரம்பகால அரசியல் பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது உள்ளாட்சித் தேர்தல்தான். 1970-ல் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக 5 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

ராஜாஜி, காமராஜர், பன்னீர்செல்வம் ஆகிய மூன்று முதல்வர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மக்களால் கண்டெடுக்கப்பட்டு பின்னர் அரசியலில் ஜொலித்தவர்கள்.
இவர்கள் மட்டுமல்ல எண்ணற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என ஏராளமானோர் தங்கள் அரசியல் பயணத்தை உள்ளாட்சியில் இருந்தே தொடங்கி தொடர்ந்து பயணிக்கிறார்கள். அதனால்தான் மற்ற தேர்தல்களைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது உள்ளாட்சித் தேர்தல்.

Also see:

First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading