தமிழ்நாடு சட்டப்பேரவையில் எத்தனை தலைவர்கள் படங்கள் உள்ளன? திறந்துவைக்கப்பட்ட வரலாறு

மாதிரிப் படம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 16-வது படமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் திறந்துவைக்கப்படவுள்ளது.

  • Share this:
நாட்டுக்காக பாடுபட்டத் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் திறக்கப்படவுள்ளது. கருணாநிதியின்
உருவப்படம் திறப்பதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் உள்ள தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 16 ஆக உயரவுள்ளது. தற்போதுள்ள 15  தலைவர்களின் படங்கள் எப்போது திறக்கப்பட்டது, யாரால் திறந்து வைக்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மண்டபத்தில் 1948 ஜூலை 24 ஆம் தேதி மகாத்மா காந்தியின் உருவப் படம் திறக்கப்பட்டது. இதை சென்னை மாகாண கவர்னர் ஜென்ரலாக இருந்த ராஜாஜி திறந்து வைத்தார். இதன்பின் அடுத்த ஒரே மாதத்தில், 23-8-1948 ஆம் அண்டு ராஜாஜியின் உருவப்படம் திறக்கப்பட்டது. இதனை அப்போது நாட்டின் பிரதமராக இருந்த ஜவாஹா்லால் நேரு திறந்து வைத்தார்.ஒரு தலைவர் உயிருடன் இருக்கும்போது திறக்கபட்ட ஒரே தலைவரின் உருவப்படம் என்றால் அது ராஜாஜியின் உருவப்படம் மட்டுமே.

இதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1964 ஆம் ஆண்டு மாா்ச் 22 ஆம் தேதி திருவள்ளுவரின் படத்தை அப்போது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜாகீா் ஹுசேன் திறந்தாா். இதன் பின் சி.என்.அண்ணாதுரையின் உருவப் படத்தை 1969 பிப்ரவரி 10 ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி திறந்து வைத்தாா்.

இதன்பின், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆா் முதல்வராக இருந்த போது ஐந்து தலைவா்களின் உருவப் படங்கள் திறக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உருவப் படத்தை 1977 ஆகஸ்ட் 18 ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, தந்தை பெரியாா், அம்பேத்கா், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப் படங்கள் ஒரே நேரத்தில் 1980 ஆகஸ்ட் 9 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்தப் படங்களை அப்போதைய கேரள ஆளுநா் ஜோதி வெங்கடாசலம் திறந்தாா். இதன்பின் தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் 1992 ஆம் ஆண்டு  ஜனவரி 31 ஆம் தேதி முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் உருவப் படத்தை பேரவையில் வைத்து அவரே திறக்கவும் செய்தாா்.

இதன் பின் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைசராக பொறுப்பேற்றதும், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் படம் கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராமசாமி படையாட்சியாரின்  உருவப் படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் ஆண்டு  முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தாா்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி வ.உ.சி, ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் உருவ படங்களை அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவப் படத்தை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை மண்டபத்தில் திறந்துவைக்கவுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தலைவரின் படத்தை திறந்து வைக்க வரும் இரண்டாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார் ராம்நாத் கோவிந்த்.
Published by:Karthick S
First published: